வரலாற்றுப் பின்னணியும் வீரப்பனைத் தேடும் வேட்டையும் :
வரலாற்று நாயகர்களில் வீரப்பனுக்கு ஒரு இடம் உண்டு. எப்பொழுதுமே சமூகத்தில் கிளர்ச்சி மனநிலைப் பாங்கான இளைஞர்களை, நேர்மையாக பொதுத் தொண்டு செய்பவர்களை ஆரம்பத்தில் எதிர்மறையாகப் பார்ப்பது பழகிப் போன ஒன்று. அதே போல், காவல்துறையினர் தெரிந்தோ தெரியாமலோ குற்றச் செயலில் ஈடுபடும் ஒருவனை அந்தச் செயலுக்கான மூல காரணத்தை அறிந்து அவனைத் திருத்துவதற்குப் பதிலாக அவனுக்கு ஒரு புனைப் பெயரைச் சூட்டி, பொது மக்கள் மத்தியில் அவனைக் கொடும் குற்றவாளி போல் சித்தரிப்பது காவல்துறைக்கே சொந்தமானது. இந்த வரிசையில் தான் வீரப்பனுக்குக் கொடுக்கப்பட்ட அடைமொழி தான் 'சந்தனக் கடத்தல் வீரப்பன்'.

சந்தன மரங்களையும் யானைத் தந்தங்களையும் காட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கடத்திக் கபளீகரம் செய்தவர்கள் அமைச்சர்களாகவும் அதிகாரிகளாகவும் குளிரூட்டப்பட்ட அறைகளில் வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த சுகங்களையும் அனுபவிக்காத வீரப்பனை தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் மிகப்பெரிய சமூக விரோதி போல் படம் பிடித்துக் காட்டியது. அவனுடைய உண்மை வரலாற்றை எழுதினால் பல முக்கிய நபர்களின் தலைகளை மாலையாகத் தொங்கவிட நேரிடும். வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் பொது மக்களின் பணம் பாழாக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும் வீரப்பனின் உறவுகளையும் சூறையாடியது.

இந்த வகையில் தான் அவரது தங்கை திருமதி. மாரியம்மாளிடம் வீரப்பன் இருக்கும் இடத்தைக் காட்ட வேண்டும் என்று அதிரடிப்படையினர் கடுமையான சித்திரவதை செய்தனர். இதனால் மனமுடைந்த மாரியம்மாள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அதன் தொடர்ச்சியாக அவரது மைத்துனரும் மாரியம்மாளின் கணவருமான திரு. அர்ஜூனன் கர்நாடக மாநில மாதேஸ்வரன்மலை காவல்துறையினரால் 14.09.1995 அன்று கைது செய்யப்பட்டார். அப்பொழுது திரு. அர்ஜூனனோடு கைது செய்யப்பட்ட நபர்களை விடுவித்த மாதேஸ்வரன்மலை காவல்துறையினர், அர்ஜூனனை மட்டும் விடுவிக்கவில்லை. இந்த நிகழ்வே இந்த எழுத்தின் மையக்கரு ஆகும்.
வீரப்பனின் மைத்துனர் திரு. அர்ஜூனனுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் ஆவார்கள். தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் வீரப்பனைத் தேடிக் கொண்டிருந்த பொழுது தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அதனை ஒட்டியுள்ள மலைக் கிராமங்களிலும் வாழ்ந்து வந்த மக்களை வீரப்பனைத் தேடுகிறோம் என்ற போர்வையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கினர். இவற்றை ஒவ்வொன்றாக அடுக்கினால் மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரத்தைத் தாண்டி கொடுமைகளை அடுக்கிவிடலாம். ஆனால், உதாரணமாக அர்ஜூனன் கதையை மட்டும் இங்கு எழுத்தாகப் பதியப்படுகிறது. காரணம் அர்ஜூனனின் நான்கு குழந்தைகளில் ஒருவரான திரு. சதீஷ்குமார் என்பவர் நடத்தி வருகின்ற தொடர் சட்டப் போராட்டம்தான் இந்த எழுத்து உருவாவதற்கு உயிராக (Oxygen) இருக்கிறது.
2. தடா கைதும் அர்ஜூனனின் எச்சரிக்கைக் கடிதமும்:

திரு. அர்ஜூனனைப் பல்வேறு குற்றங்களில் அடிக்கடி கைது செய்வது காவல்துறையினருக்கு வாடிக்கையாக இருந்து வந்தது. அவரை 1993 ஆகஸ்ட் மாதத்தில் தடா (TADA) சட்டத்தில் கைது செய்து சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். அப்பொழுது விசாரணை தேதிகளில் மாண்புமிகு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பொழுது, காவல்துறையினர் அவரைக் கொலை செய்வதற்கு (என்கவுண்டர்) முயற்சி செய்துள்ளார்கள் என்று உணர்ந்து கொண்ட அர்ஜூனன், தடா நீதிமன்ற நீதிபதி அவர்களுக்குக் கடிதம் ஒன்றை நேரடியாகச் சமர்ப்பித்துள்ளார். இந்தக் கடிதம் ஒன்றே அவரது மரணத்தின் பின்னணியை உணர்த்துகின்ற கண்முன்னே உள்ள சாட்சியமாகும்.
3. ஏரியூர் காவல் நிலைய வழக்கும் பொய் ஆடு திருட்டு வழக்கும்
திரு. அர்ஜூனன் என்பவர் மீது தருமபுரி மாவட்டம் பெண்ணகரம் பகுதியிலுள்ள ஏரியூர் காவல் நிலையத்தினரால் குற்ற எண் 190/1993-ஐ 13.09.1993 அன்று பதிவு செய்யப்பட்டு அதில் பன்னிரண்டு நபர்களைக் குற்றவாளிகளாகக் காட்டினர். அதில் அர்ஜூனன் 7-வது குற்றவாளியாக (A-7) சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் திரு. அர்ஜூனனை மாதேஸ்வரன்மலை காவல்துறையினர் 1995-ல் மீண்டும் கைது செய்தனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம், அவர் மற்றவர்களோடு சேர்ந்து "ஆடு திருடினார்" என்பது தான். காவல்துறையினரின் மிகப்பெரிய தவறான அணுகுமுறை, மிகவும் கண்ணியமான மனிதனைக் கூட ஒரு முதல் தகவல் அறிக்கை (FIR) மூலம் இழுத்துப் பூட்டுவது. இப்படித்தான் வீரப்பன் கண்காணிக்கப்பட்டு வந்த பொழுது, அவருடைய தங்கையின் கணவர் மீது போடப்பட்ட ஆடு திருட்டு வழக்கு என்பது அறத்திற்குப் புறம்பானது ஆகும். இந்தப் பொய்யான வழக்கின் கீழ் அவரை மீண்டும் கைது செய்தனர்.
அவரைக் கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட நேரடிச் சாட்சி இன்றும் உயிரோடு இருக்கிறார். அர்ஜூனன் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தான் அவரது இறுதி வாழ்க்கையாக முடிந்துபோனது.
4. சதீஷ்குமாரின் தேடலும் சென்னை உயர் நீதிமன்ற ஆட்கொணர்வு மனுவும் (HCP No. 2065/2009)

இந்தக் கைது நடந்த பொழுது திரு. சதீஷ்குமார் என்பவரது வயது ஆறு ஆகும். ஆறு வயதே நிறைவடைந்த குழந்தைக்கு எந்தவித விவரமும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. மேலும், அவர் அழுவதற்கு அன்னை கூட அருகில் இல்லை. அதற்குப் பிறகு அவரால் படிப்பைத் தொடர முடியாமல் மூன்றாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்த நேரிட்டது. பின்னர் அவர் வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு, தன்னுடைய தந்தையின் இருப்பிடத்தைப் பற்றித் தேடுவதற்குத் தனது பயணத்தை 2008-ல் மேற்கொண்டார்.
குறிப்பாக தமிழக முதல்வர், புதுடெல்லியிலுள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், தமிழ்நாடு ஆளுநர் மற்றும் கர்நாடக அரசு போன்றோருக்கு மனுக்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, தனது தந்தையைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரினார். ஆனால், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; எழுதப்பட்ட மனுக்களில் ஒன்றிற்குக்கூட பதில் அளிக்கக் கூட யாருக்கும் மனமில்லை.
எனவே சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு (H.C.P. No. 2065/2009) தாக்கல் செய்து, அதில் தன்னுடைய தந்தை திரு. அர்ஜூனன் (த/பெ. குத்துசாமி) என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டினார்.



அந்த வழக்கில்: தமிழ்நாடு அரசு (1-வது எதிர்மனுதாரர்),காவல்துறைத் தலைவர் / DGP (2-வது எதிர்மனுதாரர்), தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (3-வது எதிர்மனுதாரர்),கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்திலுள்ள மாதேஸ்வரன்மலை காவல் நிலையம் (4-வது எதிர்மனுதாரர்) ஆகியோர் சேர்க்கப்பட்டு அனைவருக்கும் நீதிமன்ற அழைப்பாணை சார்வு செய்யப்பட்டது.
அப்பொழுது 4-வது எதிர்மனுதாரரான மாதேஸ்வரன்மலை காவல்துறையினர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், "10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரைப் பற்றித் தற்போது எங்களால் கண்டறிய இயலாது" என்று தெரிவித்தனர். இதனைக் கணக்கில் எடுத்துக்கொண்ட மாண்புமிகு நீதியரசர்கள் திரு. சி. நாகப்பன் மற்றும் திரு. பி.ஆர். சிவக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தது.
நீதிமன்ற உத்தரவின் வரிகள் பின்வருமாறு:
"4. Though the petitioner has stated that his father was missing from 14.09.1995, no steps were taken for tracing his father for more than a decade considering the averments made by the 4th respondent in the counter affidavit and the facts and circumstances of the case. No further adjudication is necessary in this Habeas Corpus petition.
5. The Habeas Corpus petition is closed. However, it is open to the petitioner to pursue other remedies available in law".
மேற்கண்ட உத்தரவை எழுதிய நீதியரசர் திரு. சி. நாகப்பன் அவர்கள் பின்னர் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஓய்வு பெற்றது வரலாற்று விந்தை. குற்ற வழக்குகளில் "குற்றம் எப்பொழுதுமே சாகாது (Crime Never Dies)" என்பது சட்டத்தின் தாரக மந்திரம். ஆனால், இங்கே எந்தக் கோட்பாட்டையும் பின்பற்றாமல் நீதிமன்றத்தால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

5. முரண்பட்ட இறப்புச் சான்றிதழும் குற்றவியல் அமர்வு நீதிமன்றத் தீர்ப்பும்
ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், சதீஷ்குமார் தனது தந்தையைத் தேடும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார்.
இதற்கிடையில் நாட்ராபாளையம் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அளித்த இறப்புச் சான்றிதழில், அர்ஜூனன் 13.06.1995 அன்றே இறந்துவிட்டதாகவும், அந்த இறப்பு 26.12.2001 அன்று தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம், 1969-ன் கீழ் பதிவு செய்யப்பட்டதாகவும் சான்றளிக்கப்பட்டிருந்தது. மேலும், அந்தச் சான்றிதழில் அரசு முத்திரை இடப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்டிருந்தார்.
இந்த இறப்புச் சான்றிதழ் சதீஷ்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 14.09.1995 அன்று காவல் நிலையத்தில் அர்ஜூனன் உயிருடன் இருந்ததற்கு சாட்சியம் இருக்கும் போது, 13.06.1995-லேயே இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது பெரும் மர்மமானது.

அதே சமயம், தருமபுரியிலுள்ள கூடுதல் அமர்வு மற்றும் விரைவு நீதிமன்றத்தில் 19.12.2006 அன்று வழங்கப்பட்ட அமர்வு வழக்கு எண். 200/2002-ன் தீர்ப்பில், அர்ஜூனன் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அந்தத் தீர்ப்பில் அர்ஜூனன் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டது (PRC. No. 8/2002).
நீதிமன்றத் தீர்ப்பு வரிகள்:
"During the pendency of the case A2 Ellappan, A7 Arjunan, A8 Perumal were died and A11 Veerappan and A12 Madhu were split up to PRC.No.8/2002."
6. இழப்பீடு கோரிய புதிய நீதிப்பேராணை மனு (W.P. No. 7337/2017) மற்றும் வாதங்கள்
இந்த முரண்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 03.01.2017 அன்று சதீஷ்குமார் தமிழக உள்துறைச் செயலாளருக்கும் தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கும் விரிவான மனு அளித்தார். தனது தந்தை காவல் மரணமடைந்ததை தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் திட்டமிட்டே மறைத்துள்ளதால், ரூ. 25,00,000/- இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இழப்பீடு கோருவதற்குச் சட்டப்பூர்வமாகப் பின்வரும் வலுவான பிரிவுகள் ஆதாரங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டன:
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 21: அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளால் கொடுமைப்படுத்தப்பட்டாலோ உயிர் இழப்பு ஏற்பட்டாலோ இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
மோட்டார் வாகனச் சட்டம்: விபத்து ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடிக்க முடியாத போது கூட "Hit and Run" என்ற கோட்பாட்டின் கீழ் இழப்பீடு வழங்கப்படுகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 357-A: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் மற்றும் தமிழ்நாட்டின் “பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் திட்டம், 2013”.
இதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு (W.P. No. 7337/2017) தாக்கல் செய்யப்பட்டது.
மனுவின் பிரார்த்தனை (Prayer):
"For the above mentioned reasons, it is therefore prayed that this Hon'ble Court may be pleased to issue appropriate WRIT, ORDERS OR DIRECTIONS and in particularly WRIT OF MANDAMUS to direct the respondents to pay compensation sum of Rs.20,00,000/- (Twenty Lacs Only) with 12% interest from the date of occurrence to the petitioner for the murder of his father Arjunan and pass such other further order or orders as this Hon'ble Court may deem fit and proper in the circumstances of the case, Award cost and thus render justice.”

இந்த வழக்கு மாண்புமிகு நீதியரசர் திரு. ஜி.கே. இளந்திரையன் அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்த போது, "ஏற்கெனவே ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே, எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்?" எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்ய முற்பட்டார்.
அப்பொழுது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வரலாற்றுச் சிறப்புமிக்க வாதத்தை முன்வைத்தார்:
"அமெரிக்காவில் 03.04.1968 அன்று மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்ட போது, ஜேம்ஸ் ஏர்ல் ரே என்ற தனி நபர் மட்டுமே கொன்றதாக அரசு முடித்து அவருக்குத் தண்டனை அளித்தது. ஆனால், அவரது நண்பர்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் பலமுறை தொடர் மேல்முறையீடுகள் செய்து, இறுதியாக மார்ட்டின் லூதர் கிங்கை அமெரிக்க அரசாங்கமே திட்டமிட்டுக் கொன்றது என்பதை வெளிக்கொணர்ந்தனர். ஆனால், நமது நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மகன் தொடரும் இரண்டாவது மனுவைக் கூட ஏற்க மறுக்கலாமா?"
மார்ட்டின் லூதர் கிங் கொலை வழக்கு தொடர்பான இந்த வாதத்தைக் கேட்ட நீதியரசர், வழக்கைத் தள்ளுபடி செய்யாமல் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.
-இதன் தொடர்ச்சி அடுத்தவாரம் தொடரும்

கருத்துகள் (0)
கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion
கருத்து பதிவிட உள்நுழையவும் — log in