🔴
•🔴 வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்ததாக போலீசார் மீது கடும் குற்றச்சாட்டு: அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மோதல்!•🔴 நீதிபதிகளை மிரட்டும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!•🔴 படிவம் 6 திருத்தத்திற்கு யார் அனுமதி? – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நேஹா போராவின் கடும் கேள்வி!•🔴 ரூ.5,000 கோடி நிதி மோசடி: நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் பிரேம்குமார் சென்னையில் அதிரடி கைது!•🔴 கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற காவல்துறை: மக்களால் அடித்து விரட்டப்பட்ட சோதனை! – பீகாரில் வெடித்த பொதுமக்கள் ஆவேசம்!•🔴 பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரில் மறைப்பு ஒப்பந்தமா? – போக்சோ குற்றவாளி வீரமணிக்கு உதவியதாக சுரேஷ் வேதநாயகம் மீது புதிய புகார்; நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு!•🔴 'தமிழ் தேசியம்' முகமூடியும் அவதூறு வழக்கும்: 'சாட்டை' துரைமுருகனுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? – உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!•🔴 420 கோடி பள்ளி ஊழல்: அன்பில் மகேஷ் கைது; 'சண்முகப்பிரியா' வீட்டில் சிசிபி அதிரடி சோதனை – பணம் எங்கே போனது?•🔴 நீதிபதி மகன் கார் விபத்து: உயிர் பறித்தும் மூடிமறைக்க முயற்சி – 4 போலீசார் சஸ்பெண்ட்; நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை!•🔴 அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வன்முறை: நீதிபதி அஜய் பானோட் நீதிமன்றத்தில் பொருட்கள் வீசி விவாதம் – முன்னெப்போதும் இல்லாத காட்சிகள்!•🔴 வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்ததாக போலீசார் மீது கடும் குற்றச்சாட்டு: அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தில் மோதல்!•🔴 நீதிபதிகளை மிரட்டும் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு!•🔴 படிவம் 6 திருத்தத்திற்கு யார் அனுமதி? – உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நேஹா போராவின் கடும் கேள்வி!•🔴 ரூ.5,000 கோடி நிதி மோசடி: நியூஸ் தமிழ் 24x7 இயக்குநர் பிரேம்குமார் சென்னையில் அதிரடி கைது!•🔴 கள்ளச்சாராய சோதனைக்கு சென்ற காவல்துறை: மக்களால் அடித்து விரட்டப்பட்ட சோதனை! – பீகாரில் வெடித்த பொதுமக்கள் ஆவேசம்!•🔴 பத்திரிகையாளர் மன்றத்தின் பெயரில் மறைப்பு ஒப்பந்தமா? – போக்சோ குற்றவாளி வீரமணிக்கு உதவியதாக சுரேஷ் வேதநாயகம் மீது புதிய புகார்; நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு!•🔴 'தமிழ் தேசியம்' முகமூடியும் அவதூறு வழக்கும்: 'சாட்டை' துரைமுருகனுக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? – உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை!•🔴 420 கோடி பள்ளி ஊழல்: அன்பில் மகேஷ் கைது; 'சண்முகப்பிரியா' வீட்டில் சிசிபி அதிரடி சோதனை – பணம் எங்கே போனது?•🔴 நீதிபதி மகன் கார் விபத்து: உயிர் பறித்தும் மூடிமறைக்க முயற்சி – 4 போலீசார் சஸ்பெண்ட்; நீதிபதியை கைது செய்ய நடவடிக்கை!•🔴 அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வன்முறை: நீதிபதி அஜய் பானோட் நீதிமன்றத்தில் பொருட்கள் வீசி விவாதம் – முன்னெப்போதும் இல்லாத காட்சிகள்!
KARUPPU NEWS
நீதியை தேடிய கதைகள் : தொடரும் குரு பூஜையும், இருட்டடிப்பு செய்யபட்ட தீர்ப்பும்!
EDUCATION

நீதியை தேடிய கதைகள் : தொடரும் குரு பூஜையும், இருட்டடிப்பு செய்யபட்ட தீர்ப்பும்!

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து மேல் முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. தமிழக அரசு இன்று வரை முத்துராமலிங்கத் தேவரின் நினைவு தினத்தை அரசு விழாவாகவே கொண்டாடி வருகிறது. இத்தகைய விழாக்கள் தொடர்பாகப் புதிய வழக்குகள் தொடுக்கப்பட்டால், நீதிமன்றம் இதன் உண்மைப் பொருண்மையை ஆராய வேண்டியது அவசியம். சமூக ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Published

30 Oct 2026

சுமார் 4 மணி நேரத்தில்

Updated

30 Oct 2026

3 நிமிடம்Editorial Policy
0

1. வழக்கின் பின்புலமும் சமூகப் பார்வையும்

தென் தமிழகத்தின் சமூகச் சூழல்

தமிழ்நாட்டின் கலவரம் நிரம்பிய தீச்சுடுகள் நிறைந்த பகுதிகள் தென்மாவட்டங்கள். அதிலும் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம், சமூக கொந்தளிப்பில் எப்போதுமே 100°C-க்கு குறையாமல் இருக்கும்.

அதிலும் குறிப்பாக முதுகுளத்தூர் பகுதியில் பள்ளர்களுக்கும் (தற்போது தேவேந்திர குல வேளாளர்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மறவர்களுக்கும் இடையே தொடர்ச்சியான கலவரங்களும் அதை ஒட்டிய கொலைகளும் நடந்த வண்ணமே இருந்தன. அது இன்றும் நீறுபூத்த நெருப்பாய் எங்கொன்றும் அங்கொன்றுமாய் கொலைகள் நடந்த வண்ணமே இருக்கிறது.

இமானுவேல் சேகரன்

அதில் குறிப்பிடத்தக்கது மறவர்கள் சார்பான திரு. முத்துராமலிங்கத்திற்கும் பள்ளர்களின் பிரதிநிதியான திரு. இம்மானுவேல் சேகரனுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையும், அந்த பேச்சுவார்த்தையில் இம்மானுவேல் சேகரனின் இயல்பான எதிர்ப்பும் அவரின் அதிகார அமர்வும் திரு. முத்துராமலிங்கத்தின் மனதிலும் அவரது சாதிக்காரர்களின் மனதிலும் திரு. இம்மானுவேல் சேகரனை கொலை செய்ய தூண்டியது. இதனால், இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார்.

எனவே, முத்துராமலிங்கத்தின் மீது கொலை வழக்கு, முதல் தகவல் அறிக்கை எண். 209/1957 பதிவு செய்யப்பட்டது. உடனடியாக அவரை காவல்துறை விசாரணைக்கு எடுத்துத் தடுப்புக் காவல் சட்டம், 4/1950 பிரிவு 3(2)-இன் கீழ் அவருக்கு எதிராகத் தடுப்புக் காவல் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அதனை தமிழக அரசு 05.10.1957-இல் உறுதி செய்கிறது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Writ of Habeas Corpus) தாக்கல் செய்கிறார். அவருக்கு எதிரான தடுப்புக் காவல் ஆணை நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டு 18.02.1958 அன்று தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இராமநாதபுரம் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் அமர்வு வழக்கு எண். 189/1958-ஆகப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் அவர் நேரடியாக இந்த கொலையில் ஈடுபடவில்லை எனவும் சூழ்நிலைச் சாட்சியங்களும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஆனால், பொதுவான குற்றவியல் வழக்குகளில் "குற்றமனம் இருந்ததா? இல்லையா? என்ற காரணி முக்கியமானது ஆகும்." ஆனால், ஒரு பட்டியல் சாதி அல்லது பழங்குடியினரை சாதி இந்து ஒருவர் கொலை செய்துவிட்டால் அதற்கு குற்றமனம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் State of Karnataka -Vs- Appa Balu Ingale & Ors (1995 Supp (4) SCC Page No. 469, Para 21) என்ற வழக்கில் கூறியுள்ளது.

வழக்கு தொடரப்பட்ட பின்னணி (W.P.No.33699/2007)

இப்படி குற்ற பின்னணி கொண்ட திரு. முத்துராமலிங்கத்தேவரின் நினைவு நாளை தமிழக அரசு, அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 30-ஆம் தேதி கொண்டாடி வருகிறது. இப்படி ஒரு குற்றவாளிக்கு அரசு விழாவெடுப்பதை பல்வேறு சமூக ஆர்வலர்களும் நேர்வையாளர்களும் இன்று வரை எதிர்த்து வருகிறார்கள். இந்த எதிர்ப்புகளை அவரவர் வாய்ப்புக்கு ஏற்றவாறும் பண்புக்கு ஏற்றவாறும் எதிர்த்து வருகிறார்கள்.

இதன் ஒரு அங்கமாக ஒரு காலத்தில் இடதுசாரி இயக்கத்தில் பணியாற்றியவரும் அதற்கு பிறகு பல்வேறு சமூக பணிகளுக்கு பிறகு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கியவருமான திரு. சிம்சன் என்பவர் திரு. முத்துராமலிங்க தேவரின் 100-வது பிறந்தநாள் விழாவை 28.10.2007 முதல் 30.10.2007 வரை மூன்று நாள் விழாவாக தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடுவதை நிறுத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என என்னை அணுகினார். நான் அவர் கூறிய வரலாற்று நிகழ்வுகளையும் அதே நேரத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் நோக்கங்களையும் நேர் செய்து பார்த்து வழக்கை தாக்கல் செய்ய சம்மதித்தேன்.

வடிவேல் ராவணன்

ஆனால், வழக்கின் பின் விளைவையும் வழக்கு தொடுக்கமிற்கும் கருப்பொருளின் விளைவையும் நான் சற்று யோசிக்கவில்லை. அதற்குரிய ஆவணங்களை வழக்கை தாக்கல் செய்யவிருந்த திரு. சிம்சன் அவர்களிடமிருந்தும் சில நண்பர்களிடமும் கேட்டு பெற்று கொண்டேன். அவரது நண்பரில் குறிப்பிடத்தக்கவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்களில் ஒருவரும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டவருமான திரு. வடிவேல் ராவணன் கொடுத்த ஆவணங்களையும் அறிவுரைகளையும் உள்வாங்கிக்கொண்டு ஆணையுறுதியுரையை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன். அது W.P.No.33699/2007- ஆக எண்ணிடப்பட்டது.

நீதிமன்ற மனுவின் கோரிக்கை (Prayer)

"For the above mentioned reasons, it is prayed that this Hon'ble court may be pleased to issue a WRIT, ORDER, OR DIRECTIONS and in particularly WRIT OF DECLARATION declaring that the centenary birth anniversary of Muthuramalinga Thevar for 3 days from 28.10.2007 to 30.10.2007 as Government function as announced by the respondents No. 1 to 3 as void and illegal and consequently direct the 1st respondent not to announce any holiday for anniversaries of any community leader in-future and pass such other further order or orders as this Hon'ble Court may deem fit and proper in the circumstances of the case, Award cost and thus render justice."

நீதிமன்ற விசாரணை மற்றும் வாதங்கள்

இந்த வழக்கின் முதல் விசாரணை தலைமை நீதிபதி திரு. அஜித் பிரகாஷ் ஷா மற்றும் நீதிபதி M. ராமசுப்ரமணியம் ஆகியோர்கள் முன்பாக 24.10.2007 அன்று விசாரணைக்கு வந்தது. அவர்கள் அரசுக்கு அறிவிப்பு சார்பு செய்து வழக்கை 2 வாரகாலம் ஒத்திவைத்தார்கள். இப்படி வழக்கை ஏற்று கொண்டதே நான் ஓரளவு வெற்றிபெற்று விட்டதாக கருதினேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு:

  1. முதல் காரணம் நீதிமன்றம் எப்பொழுதுமே சாதாரண மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் சாதி இந்துக்களுக்கும் வசதி படைத்தவர்களுக்கும் சார்பாக இருப்பதும்;

  2. இரண்டாவது காரணம் ஒரு வழக்கை விசாரிக்கும் பொழுது அந்த வழக்கானது அரசின் கொள்கை முடிவில் தொடர்புடையது என்றால் நீதிமன்றம் தலையிடாது இருந்த போதிலும் இந்த வழக்கில் மேலே கூறப்பட்ட இரண்டு கோட்பாடுகளையும் மீறி அரசுக்கு அறிவிப்பு கொடுத்தது தான் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பை உண்டு பண்ணியது.

அதன் பிறகு இந்த வழக்கு 16.07.2008 அன்று நீதிபதி P.K. மிஸ்ரா மற்றும் நீதிபதி K. கண்ணன்

நீதிபதி K. கண்ணன்

அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இப்படி விசாரணைக்கு வருகின்ற செய்தி சில தினசரி பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்தது. இதில் மூத்த நீதிபதி P.K. மிஸ்ரா ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர். மேலும், இவர் இடதுசாரி கோட்பாட்டில் பற்றுகொண்டவர்.

இரண்டாவது நீதிபதி K. கண்ணன் அப்பொழுதுதான் புதிதாக பதவியேற்றிருந்தாலும் வழக்கறிஞர் தொழில் திறம்பட செய்து சட்ட நுணுக்கமும் சமூகத்தைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் கொண்டவர். ஆனால் அந்த நேரத்தில் அவரை நீதிபதியாவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கான காரணம் அவர் RSS-ல் உறுப்பினராக இருக்கிறார் என்பதாகும். ஆனால், எதிர்ப்பாளர்கள் அவருடைய அறிவை அசைபோட்டு செரித்துக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து நீதிபதி K. கண்ணன் அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த மாற்றம் என்பது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்பதை இதுவரை அறிந்தவர் யாரோ?

இந்த நிலையில் வழக்கு கூப்பிடப்பட்டது (Calling). உடனே, எழும்பூரிலிருந்து வந்திருந்த வழக்கறிஞர்கள் நீதிபதி P.K. மிஸ்ராவின் எண்ண ஓட்டம் அறிவின் ஆழம் இவற்றை புரிந்து கொள்ளாமல் நான் பேசுவதற்கு முன்பாகவே நீதிமன்றத்தில் குறிக்கீடு செய்தார்கள். உடனே, நீதிபதி K. கண்ணன், அவர் அப்பொழுதுதான் நீதிபதியாக பணி அமர்த்தப்பட்டிருந்தார், குறிக்கிட்டு எதற்காக வழக்கு போடப்பட்டிருக்கிறது; இந்த வழக்கில் அரசின் நிலை என்ன?; வழக்கறிஞர் யார்? என்ற விவரமெல்லாம் என்னுடைய மூத்த சகோதர நீதிபதிக்கு (நீதிபதி P.K. மிஸ்ரா) தமிழ்நாட்டின் நிலவியல் தன்மை தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு நன்றாக தெரியும். எனவே, நீங்கள் இந்த வழக்கில் ஏதாவது வாதாட விரும்பினால் முதலில் வழக்கேற்பிதழ் (Vakalat) தாக்கல் செய்து அதன் பிறகு பேசுங்கள் என்று முகத்தில் அடித்தாற்போல் கூறினார்.

உடனே, அந்த வழக்கறிஞர்கள் மேற்கொண்டு எதுவும் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். இந்த நிலையில் நீதிபதி P.K. மிஸ்ரா அவர்கள் நீதிபதி K. கண்ணன் பக்கம் சாய்த்து ஏதோ விளக்கம் கேட்டார். விளக்கத்தைப் பெற்றுக்கொண்ட நீதிபதி அவருக்குரிய பாணியில் பூப்போன்று புன்னகைத்துக்கொண்டு "Brothers this is a democratic country, No statue has special immunity, we will deal this issue" என்று கூறிவிட்டு என்னை பார்த்து நேர்மறை புன்னகையில் "Yes Vijendran, you proceed" என்று கூறினார்.

நான் உடனே எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அந்த நேரத்தில் எனக்கு இருந்த சொற்பளவு சட்ட நுணுக்கத்தையும் அரைகுறை ஆங்கிலத்தையும் வைத்துக்கொண்டு தைரியத்தை மட்டுமே நம்பி வாதாடினேன். ஆனால், ஆங்கில மொழி சரியாக தெரியாத காரணத்தினால் என்னுடைய ஆழ்மனதிற்குள்ளிருந்த அந்த வழக்கு தொடர்பான சமூக சிக்கலை அந்த நேரத்தில் எடுத்து கூற முடியவில்லை. இதற்கு ஆங்கில மொழி மிகப்பெரிய தடையாயிருந்தது; இருந்த போதிலும் திரு. முத்துராமலிங்கதேவரின் சாதி ஆதிக்க மனப்பான்மையையும் இம்மானுவேல் சேகரனை கொலை செய்ததற்காக மதுரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதையும் அப்படிப்பட்ட நபருக்கு எப்படி பொது மக்கள் வரி பணத்தில் அரசு விழா எடுக்க முடியும் என்று வாதாடினேன்.

உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் குறிப்பிட்ட சில சாதியினரே மிகச்சிறந்த வழக்கறிஞராக தங்களை பீற்றிக்கொள்வதற்கான மிகப்பெரிய ஆயுதமே ஆங்கில மொழியே ஆகும். என்னை பொறுத்தவரையிலும் இயல்பாக மனதில் நினைக்கின்ற சட்ட நுணுக்கங்களையும் தர்க்கங்களையும் (Law & Logic) எளிதாக நீதிமன்றத்தில் விவரிக்க முடியாது. அதற்காக நான் தொடர்ச்சியாக ஆங்கில நாளிதழ்களை படிப்பதையும் சட்ட இதழ்களை படிப்பதையும் மனதிற்குள் வேட்கையாக கொண்டிருந்தேன். மேலும், என்னுடைய கோட் பாக்கெட்டில் எப்போதுமே கையடக்க Oxford Dictionary வைத்து நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் படித்துக்கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் செல்போன்கள் வசதி இல்லாத காலம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுதும் அதே முயற்சியோடு தான் நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.

எனவே, நான் இளம் வழக்கறிஞர்களுக்கு என்னுடைய சிறுதுளியாக கூறுவது:

"சட்ட நுணுக்கத்தையும் தர்க்க அறிவையும் கொண்டு எந்தவொரு வழக்கறிஞரையும் நீதிபதிகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்தவர்களாக தங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும், அதாவது மின்சார கம்பிகளை தன்னுடைய கைகளால் பற்றிப்பிடிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்".

ஹெலன் கெல்லர் வாழ்க்கைப் பாடம்

ஹெலன் கெல்லர்

இப்படி நான் இந்த முயற்சியை மேற்கொள்ளும் பொழுதெல்லாம் "ஹெலன் கெல்லர்" அவர்களின் கதை என் மனதில் மிளிர்ந்து கொண்டே இருக்கும்.

அலபாமாவில் டஸ்கம்பியா அருகில் உள்ள ஓர் ஊரில் ஹெலன் கெல்லர் (1880-1968) பிறந்தார். இரண்டு வயது முடிவடைவதற்கு முன்பே, ஒருவித விஷ காய்ச்சல் போன்ற கடுமையான நோயின் தாக்குதலுக்கு ஆளானார். அந்த கொடிய நோய் பச்சிளம் குழந்தையின் பார்வையைப் பறித்து விட்டது. வாய் பேச முடியாத ஊமையாக்கி விட்டது. காதுகளையும் செவிடாக்கி விட்டது.

அலெக்சாண்டர் கிரஹாம்பெல்லின் ஆலோசனப்படி, ஆறாவது வயதில் குழந்தைக்கு ஹெலனுக்கு முறையான கல்வி கற்க ஏற்பாடு செய்தார்கள். பார்வை இழந்தவர்களுக்கான கல்வி நிலையமான பெர்கின்ஸ் இன்ஸ்டிடியூஷனிலிருந்து ஆனி சலிவன் என்ற ஆசிரியையை வரவழைத்தார்கள். காது கேட்காத மற்றும் பார்வையிழந்தவர்களுக்கான வெவ்வேறு பள்ளிகளில் கல்வி கற்ற ஹெலன் கெல்லர், 1900-மாவது வருடத்தில் ராட்கிளிஃப் (Radcliffe College) கல்லூரியில் சேர்ந்து, 1904-ல் தனது பட்டப் படிப்பை முடித்தார்.

ராட்கிளிஃப் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது தனது அனுபவங்களை ஹெலன் கெல்லர் எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய கட்டுரைகள் பிரபலமான லேடீஸ் ஹோம் ஜர்னல் (Ladies' Home Journal), மெக் கிளூர்ஸ் (McClure's) மற்றும் தி அட்லாண்டிக் மன்த்லி (The Atlantic Monthly) போன்ற பிரபலமான இதழ்களில் வெளிவந்தன. கல்லூரி கல்வி முடிந்ததும், உடல் ரீதியான சவால்களை எதிர்கொண்டவர்களின் மேம்பாட்டுப் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டார், ஹெலன் கெல்லர். உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, காது கேட்காத, கண் தெரியாத ஜீவன்களின் நலனுக்காக குரல் கொடுத்து, விளக்க உரையாற்றினார்.

2. 26 அக்டோபர் 1957 - சட்டமன்ற விதி 81-இன் கீழ் மாண்புமிகு அமைச்சர் எம். பக்தவத்சலம் ஓதிய அதிகாரப்பூர்வ அறிக்கை

மாண்புமிகு எம். பக்தவத்சலம்: மாண்புமிகு பேரவைத் தலைவரே, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் அண்மையில் ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் வன்முறைச் சம்பவங்கள், சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவும், கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஓர் அறிக்கையை அளிப்பதற்காக நான் எழுந்துள்ளேன்.

முத்துராமலிங்கத்தேவர்

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு தாலுகாக்களில் உள்ள மறவர்களுக்கும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இடையே, சமூக நல்லிணக்கத்தைக் கொண்டு வர முயற்சி செய்ததால் உருவான பதற்றம் கடந்த சில காலமாக இருந்து வருகிறது. இந்த பகுதியின் சமூக சூழ்நிலை மாநிலத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் மிகவும் கடுமையானதாக இருந்தது. ஆரம்ப காலத்தில் மகாத்மா காந்தியடிகளாலும், அதற்குப் பின்னர் அரசாங்கத்தின் கொள்கையாலும், தேவேந்திர குல வேளாளர்கள் தங்களுடைய உரிமைகளில் விழிப்புணர்வு பெற்று, அவற்றை வலியுறுத்தத் தொடங்கினர். பிற பகுதிகளைப் போலல்லாமல், இந்த சமூக உணர்வு சாதி இந்துக்களான மறவர்களுக்கு, அதிகாரம் என்று தெரிந்ததாகத் தெரிகிறது.

சிவகங்கை மற்றும் முதுகுளத்தூர் தாலுகா எல்லைப் பகுதிகளில், தேவேந்திர குல வேளாளர்கள் இரட்டைக் குவளை மற்றும் சாதி இந்துக்கள் உணவகங்களில் வழக்கமான மரியாதையை செய்ய மறுத்ததுடன், சமூக மோதல்கள் வலுவடைந்தது.

1930-ஆம் ஆண்டு, இளவங்கோட்டைத் திருவிழாவின் போது தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராகப் பல வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதற்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 107-இன் கீழ், அமைதியைப் பேணுவதற்காக 63 சாதி இந்துக்களிடம் காவல் துறையினர் பிணை ஆணை பெற்றனர். ஆனால் பதற்றம் தொடர்ந்தது.

இந்த நிலையில் 1932-ஆம் ஆண்டு ஒரு கடுமையான கொள்ளைச் சம்பவம் நடந்தது. அப்போது சாதி இந்துக்கள் தேவேந்திர குல வேளாளர்களின் குடியிருப்புகளைத் தாக்கினர். அந்த சம்பவத்தின் போது பலருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன; அவர்களுடைய நகைகள் மற்றும் பிற சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. மேற்கண்ட குற்றத்தைச் செய்த சாதி இந்துக்கள் காவல் துறையினருக்கு முன்பாகவே பகிரங்கமாக நடந்துகொண்டதை இங்குக் குறிப்பிடுகிறேன்.

1957 டிசம்பரில் இந்திய தேசிய ஜனநாயக காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டம்

1949-ஆம் ஆண்டு இரு தரப்பினரும் ஒருவரோடொருவர் மோதிக்கொண்டனர். இதன் விளைவாக, தேவேந்திர குல வேளாளர்கள் 10 பேரும் ஒரு மறவரும் கொல்லப்பட்டனர்.

1955 ஏப்ரல் மாதம், ஒரு விவாதத்தில் கசப்புணர்வு அலை ஏற்பட்டது. இதனால், இராமநாதபுரம் தாழ்த்தப்பட்டோர் இளைஞர் கழகம் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டது. அதில் சாதி இந்துக்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட துடன், சாதி இந்துக்களின் அடக்குமுறையிலிருந்து தப்பிக்க இஸ்லாத்தைத் தழுவுமாறு தேவேந்திர குல வேளாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இப்படித் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் மறவர்களுக்கும் இடையிலான துரதிர்ஷ்டவசமான பதற்றம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேலும் தீவிரமடைந்தது. பொதுத் தேர்தல்கள் நெருங்கியபோது, தேவேந்திர குல வேளாளர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்களுடைய கட்சி வேட்பாளருக்கு மட்டுமே ஆதரவளிக்க வேண்டும் என்றும் தேவர்கள் அழுத்தமளித்தனர். இந்த பதற்றம் குறித்து அரசாங்கம் நியாயமாகவே கவலை கொண்டிருந்தது. ஆயினும், அப்போதைய முக்கியமான தேவை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்வதாக இருந்தது. எனவே, முதுகுளத்தூர் தாலுகா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. உட்புறப் பகுதிகளுக்குப் போதுமான எண்ணிக்கையிலான காவல் துறையினர் விரைவாகச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பெருமளவில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகப் பெரிய அளவிலான அமைதியின்மை தடுக்கப்பட்டது; கடினமான காலகட்டத்தில் நிலைமை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.

ஆயினும், காங்கிரஸுக்கு வாக்களித்த தேவேந்திர குல வேளாளர்களைத் தேவர்கள் அச்சுறுத்தியதாக அரசாங்கத்திற்குக் தகவல்கள் வந்தன. தேவேந்திர குல வேளாளர்கள் பயன்படுத்திய கிணறுகளில் மண்ணெண்ணெய் ஊற்றுதல், அவர்களுடைய வைக்கோல் போர்களுக்குத் தீ வைத்தல் போன்ற சம்பவங்கள் அவற்றில் அடங்கும்.

பொதுத் தேர்தல்களுக்குப் பிந்தைய காலத்தில் நிலைமை மேலும் மோசமடைந்தது. திரு. முத்துராமலிங்கத் தேவரின் ஆவேசப் பேச்சுகளின் விளைவாக, அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களின் போது காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளித்தவர்களைத் துன்புறுத்தத் தொடங்கியதாகக் குற்றச்சாட்டுகள், அரசாங்கத்திற்குப் பல தரப்பிலிருந்து வரப்பெற்றன. இவற்றுள் சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அவற்றை விரிவாகக் கூறவில்லை.

முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நெருங்கியபோது, தேவேந்திர குல வேளாளர்கள் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்துவதைத் தடுக்கத் தேவர்கள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கத்திற்குத் தகவல்கள் கிடைத்தன. தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் காங்கிரஸுக்குச் சாதகமாக இருக்கலாம் என்று அவர்கள் கருதினர்.

திரு. முத்துராமலிங்கத் தேவர் மற்றும் அவருடைய ஆட்கள், தூண்டுதல் வழியில் வன்முறையைத் தூண்டும் உரைகளைப் பேசினர். மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரை இழிவுபடுத்தும் கருத்துகள் அவற்றில் இடம்பெற்றிருந்தன. அதிகாரிகளால் தனக்கு எதிராகவோ அல்லது தனது பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு எதிராகவோ எதுவும் செய்ய முடியாது என்று அவர் பகிரங்கமாகப் பெருமை பேசினார். எனவே, அந்தப் பகுதி தேவேந்திர குல வேளாளர்கள் அச்சமின்றித் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டுமானால், மறவர்களிடமிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரியதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. சாதி அல்லது சமூக வேறுபாடின்றி அனைவரும் அச்சமோ மிரட்டலோ இன்றித் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, அந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் ஆயுதக் காவல் படைப் பிரிவுகளை அனுப்பியது அவசியமானது. இடைத்தேர்தல்கள் அமைதியாக முடிவடைந்தன.

ஆனால், 1957 ஜூலை 4-ஆம் தேதி முடிவடைந்த இடைத்தேர்தலில், தேவேந்திர குல வேளாளர்கள் சிலர் தங்களுடைய பேச்சுக்குக் கட்டுப்படாமல் காங்கிரஸுக்கு வாக்களித்ததாகக் கருதிய தேவர்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியது. அதனால் அவர்கள் தேவேந்திர குல வேளாளர்களைத் தாக்கினர். சில இடங்களில் போட்டியாகப் பலர் இருந்ததால் தேவேந்திர குல வேளாளர்களும் பதிலடி கொடுத்தனர். அதன் பின்னர் செப்டம்பர் 10-ஆம் தேதி வரை, அந்தப் பகுதியில் கலவரம், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், கொள்ளை, சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பல சம்பவங்கள் பதிவாகின.

செப்டம்பர் 1957 நிகழ்வுகளின் காலவரிசை

மாண்புமிகு பேரவைத் தலைவரே, செப்டம்பர் 10, 1957 அல்லது அதற்குப் பின்னர் நடந்த சம்பவங்களை, இந்த சமூகங்களுக்கிடையிலான பதற்றத்தின் பின்னணியில்தான் நாம் பார்க்க வேண்டும் என்று நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். செப்டம்பர் 10-ஆம் தேதி மற்றும் அதைத் தொடர்ந்து வந்த நாட்களில் நடந்த சம்பவங்களை இனி காலவரிசைப்படி சுருக்கமாகக் கூறுகிறேன்:

1. செப்டம்பர் 10: சமாதான மாநாடும் இம்மானுவேல் சேகரன் படுகொலையும்

அண்மையில் ஏற்பட்ட சட்ட ஒழுங்குப் பிரச்சனையின் தொடக்கமாக அமைந்தது, இந்த தாலுகாக்களில் அதிகரித்து வந்த சமூகப் பதற்றத்தைத் தணித்து, நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்காக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரால் 1957 செப்டம்பர் 10-ஆம் தேதி கூட்டப்பட்ட "சமாதான மாநாடு" ஆகும். பல்வேறு சமூகங்களின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட திரு. முத்துராமலிங்கத் தேவர், தேவேந்திர குல வேளாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தாழ்த்தப்பட்டோர் கழகத் தலைவரான திரு. இம்மானுவேல் சேகரன் தலைமை வகித்ததைச் சந்தேகித்தார். திரு. தேவர், "அவர் தன்னைத் தனக்கு இணையான தலைவராகக் காட்டிக்கொள்ள முடியுமா? தேவேந்திர குல வேளாளர்கள் சார்பில் அவருக்கு வாக்குறுதி அளிக்கும் உரிமை ஏதேனும் உண்டா?" என்று இம்மானுவேல் சேகரனிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதற்குப் பதிலளித்த திரு. இம்மானுவேல் சேகரன், திரு. தேவருக்கு இணையான அந்தஸ்துள்ள தலைவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள முடியாவிட்டாலும், தேவேந்திர குல வேளாளர்களிடையே தமக்கெனத் தனிப்பட்ட ஆதரவாளர்கள் இருப்பதாகக் கூறினார். மாநாட்டை விட்டு வெளியேறும்போது, இம்மானுவேல் சேகரன் போன்ற தமக்கு இணையான தகுதியற்றவர்களுடன் தமக்குப் பதிலாகப் பேச அனுமதிக்கும் அளவுக்குத் தமது ஆதரவாளர்கள் இருந்தார்களே என்று திரு. முத்துராமலிங்கத் தேவர் அவர்களைக் கடிந்துகொண்டதாகத் தெரியவருகிறது.

அடுத்த நாளே, பரமக்குடியில் திரு. இம்மானுவேல் சேகரன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விரைவு நீதிமன்ற விசாரணையில் வரும் என்பதால், இதன் மேலதிக விவரங்களை நான் கூற விரும்பவில்லை. இந்தச் சம்பவம் முதுகுளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியான குற்றச் சம்பவங்கள் நடப்பதற்குத் தூண்டுகோலாக அமைந்தது.

2. செப்டம்பர் 13: பரஸ்பரத் தாக்குதல்கள்:

1957 செப்டம்பர் 13-ஆம் தேதி, காலை சுமார் 11 மணியளவில், வேல்களுடனும் அரிவாள்களுடனும் ஆயுதம் ஏந்திய தேவர்கள் ஒரு குழுவினர், அருகிலுள்ள தேவேந்திர குல வேளாளர்களைத் தாக்கி, ஒரு பெண் உட்பட 5 பேரைக் கொலை செய்தனர். மேலும், 24 வீடுகளுக்குத் தீவைத்ததில், இறந்தவர்களின் உடல்களும் நாசமாகின. இதற்கான உடனடி காரணம் என்னவெனில், 1957 செப்டம்பர் 12-ஆம் தேதி அருகிலுள்ள கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட நாடகத்தில், திரு. முத்துராமலிங்கத் தேவரைப் புகழ்ந்து பாடப்பட்ட பாடலுக்குத் தேவேந்திர குல வேளாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அதே நாளில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் பதிலடியாகச் செயல்பட்டனர். அவர்கள் தேவர்களைத் தாக்கி, இரண்டு பெண்கள் உட்பட 3 பேரைக் கொலை செய்தனர்; அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்ததில், இறந்தவர்களின் உடல்களும் எரிந்தன.

3. செப்டம்பர் 14: ஓரடி மோதலும் கீழத்தூவல் துப்பாக்கிச்சூடும்

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் நடுகல்

1957 செப்டம்பர் 14-ஆம் தேதி காலையில், ஓரடி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் தேவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 தேவேந்திர குல வேளாளர்கள் காயமடைந்தனர்.

அதே நாளில், இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்காக கீழத்தூவல் கிராமத்திற்குச் சென்ற காவல் துறையினர், கொடிய ஆயுதங்களை ஏந்திய சில தேவர்களைக் கொண்ட சட்டவிரோதக் கும்பலால் தாக்கப்பட்டனர். தற்காப்புக்காக அந்தச் சட்டவிரோதக் கும்பல் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாயிற்று. இதன் விளைவாக 5 மறவர்கள் கொல்லப்பட்டனர்.

அரசாங்கத்தின் உத்தரவுப்படி, வருவாய் வாரிய உறுப்பினரான ஐ.சி.எஸ். அதிகாரி திரு. எஸ். வெங்கடேஸ்வரன் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். வாரிய உறுப்பினர் அறிக்கை அளிக்கப்பட்டு, சட்டமன்றப் பேரவை மேஜையில் வைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாயிற்று என்றும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது நியாயமானதே என்றும் திரு. வெங்கடேஸ்வரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவரது அறிக்கையை ஏற்றுக்கொண்டது.

4. செப்டம்பர் 16: இலந்தைக்குளம், இருளப்பபுரம், செந்திக்கோட்டை மற்றும் வீரம்பல் கைதிகள்

1957 செப்டம்பர் 16-ஆம் தேதி காலை சுமார் 6 மணியளவில், இலந்தைக்குளம் கிராமத்தில் தேவர்களுக்கும் தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் உட்பட 4 தேவர்கள் மற்றும் 2 தேவேந்திர குல வேளாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 17 தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் 2 தேவர்கள் காயமடைந்தனர்.

அதே நாளில், ஆயுதம் ஏந்திய தேவர்கள் ஒரு குழுவினர் இருளப்பபுரம் மற்றும் செந்திக்கோட்டை கிராமங்களில் ஏறத்தாழ 60 வீடுகளுக்குத் தீவைத்தனர். ஒரு பெண் உட்பட 3 தேவேந்திர குல வேளாளர்கள் கொல்லப்பட்டனர்; ஒரு பெண் படுகாயமடைந்தாள்.

அதே நாளில், ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர், வீரம்பல் கிராமத்தில் சுமார் 500 தேவேந்திர குல வேளாளர்களைக் கண்டனர். மறவர்களை அவர்கள் தாக்குவதைத் தடுக்க, அவர்களில் 120 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பல அரிவாள்கள் மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

5. செப்டம்பர் 17: ஆயுதக் குழு மோதலும் துப்பாக்கிச்சூடும்:

1957 செப்டம்பர் 17-ஆம் தேதி மாலையில், முதுகுளத்தூர் கிராமங்களைத் தாக்கும் நோக்கத்துடன், சுமார் 1,000 ஆயுதம் ஏந்திய தேவர்கள் திரண்டனர். சிறப்பு ஆயுதக் காவல் படையினர் அவர்களை எதிர்கொண்டபோது, அந்தப் படைப்பிரிவை நோக்கிப் பாறைகள் மற்றும் துப்பாக்கிகள் உட்படக் கொடிய ஆயுதங்களால் தாக்கப்பட்டது. காவல் துறையினர் 7 சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இருவர் கொல்லப்பட்டனர்; இருவர் காயமடைந்தனர். வீரம்பலுக்குச் செல்லும் வழியில், அதே நாளில் முன்னதாகத் தட்டங்குடி கிராமத்தில் சில தேவேந்திர குல வேளாளர்களின் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டது.

6. செப்டம்பர் 18 - 20: பரவலான தீவைப்புச் சம்பவங்களும் மாளவராயனேந்தல் மோதலும்:

1957 செப்டம்பர் 18-ஆம் தேதி மாலை சுமார் 4 மணியளவில், தேவர்கள் ஒரு குழுவினர் தட்டங்குடி கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் வீடுகளுக்குத் தீவைத்தனர். அதே நாள் இரவு சுமார் 10 மணியளவில், சிவகங்கை தாலுகாவிலுள்ள பெரியபங்கஜேரி கிராமத்தில் கூரைகள் எரிவதைக் கண்ட காவல் துறையினர், கிராமத்தை நோக்கிச் சென்றனர். அப்போது ஆயுதம் ஏந்திய சுமார் 100 தேவர்கள் காவல் துறையினரைக் கொடூரமாகத் தாக்கினர். அந்தக் கும்பலைக் கலைப்பதற்காகக் காவல் துறையினர் ஒரு சுற்றுத் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாயிற்று. உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை. அதே நாளில், பங்கஜேரி, நரிக்குடி, பிடாரி, புலியூர் மற்றும் வீரமானியம் கிராமங்களில் தேவேந்திர குல வேளாளர்களின் கூரை வீடுகளுக்குத் தீவைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகின.

1957 செப்டம்பர் 20-ஆம் தேதி, காவல் ஆய்வாளர், மலபார் சிறப்புப் காவல் படையினருடன் இணைந்து, நரிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில கிராமங்களில் பதிலடியாக வீடுகளுக்குத் தீவைத்துக்கொண்டிருந்த தேவர்கள் குழுவைத் தொடர்ந்து சென்றார். அப்போது, ஆயுதம் ஏந்திய தேவர்கள் குழு அவர்களை எதிர்கொண்டது. அந்த ஆயுதக் குழு கொடிய ஆயுதங்களால் காவல் துறையினரைத் தாக்கியது. இதையடுத்த காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

அதே நாளில், பங்கஜேரி, கானூர் மற்றும் பிற கிராமங்களில் பதிலடியாக வீடுகளுக்குத் தீவைத்து சொத்துகளைக் கொள்ளையடித்துச் சென்ற 500 தேவர்களைக் கொண்ட ஆயுதப் படையை, மானாமதுரை காவல் ஆய்வாளர் தலைமையிலான சிறப்பு ஆயுதக் காவல் படையினர் மாலை 5 மணியளவில் மாளவராயனேந்தலில் எதிர்கொண்டனர். படையில் இருந்த ஆயுதங்களைக் கீழே போட்டுச் சரணடையுமாறு காவல் துறையினர் உத்தரவிட்டனர். ஆனால், அந்தப் படை காவல் துறையினரின் உத்தரவை மீறிக் கற்களை வீசியது. அப்போது காவல் துறையினருடன் இருந்த சிவகங்கை தாலுகா மேஜிஸ்திரேட், துப்பாக்கிச்சூடு நடத்துமாறு உத்தரவிட்டார். சுற்றுகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பின்னரும் அந்தப் படை காவல் துறையினரை நோக்கி முன்னேறியது. இதையடுத்த மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

7. வீரம்பல் தேவாலயச் சம்பவம் (செப்டம்பர் 20)

அதே நாளில் பிற்பகலில், வீரம்பல் கிராமத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்தது. இலந்தைக்குளம் மற்றும் பிற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 தேவர்கள், கொடிய ஆயுதங்களை ஏந்திக்கொண்டு வீரம்பல் தேவேந்திர குல வேளாளர்களைத் தாக்கினர்.

அச்சமடைந்த தேவேந்திர குல வேளாளர்கள் ஒரு தேவாலயத்திற்குள் ஓடிச் சென்று, கதவுகளையும் ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டு தஞ்சமடைந்தனர். ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களைத் தொடர்ந்து தேவாலயத்திற்குள் சென்றனர். கதவுகளுக்குத் தீவைத்தனர்; ஜன்னல்களை உடைத்தனர்; உள்ளே இருந்த தேவேந்திர குல வேளாளர்களை நோக்கிச் சுட்டனர். இதில் இருவர் கொல்லப்பட்டனர்; 32 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார்.

செப்டம்பர் 21 முதல் 30-ஆம் தேதி வரை, அந்தப் பகுதியிலுள்ள சில கிராமங்களில் கலவரம், தீவைப்பு மற்றும் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பல சம்பவங்கள் பதிவாகின. இருப்பினும், அவற்றில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்தச் சம்பவங்கள் நிலைமையின் தீவிரத்தையும், அந்தப் பகுதியிலுள்ள தேவர்கள் தங்களுடைய சமூக மேட்டிமைத்தன உணர்வில் எந்த அளவுக்கு உறுதியாக இருந்தார்கள் என்பதையும் மாண்புமிகு உறுப்பினர்கள் அறிந்துகொள்ள முடியும்.

முத்துராமலிங்கத் தேவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

சமூகங்களுக்கிடையே வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும் நோக்கத்துடன் திரு. முத்துராமலிங்கத் தேவர் பேசிய பேச்சுகளைக் கண்டித்து வந்த இதே பொதுமக்கள் தான். அவருடைய சில வழக்கமான பேச்சுகளை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்:

  • 1956 மே 12-ஆம் தேதி மதுரையில் பேசியபோது, இந்தியா காமன்வெல்த்தை விட்டு வெளியேறாவிட்டால், நாடு தழுவிய வன்முறைப் போராட்டத்தைத் தொடங்குவதாக அவர் அறிவித்தார்.

  • 1956 ஜூன் மாதம் அபிராமத்தில் அவர் பேசிய ஒரு பேச்சில், தனக்கு எதிராக ஏதாவது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டால், காவல் துறை அதிகாரிகள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினார்.

  • 1957 ஜூலை 10-ஆம் தேதி வனங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, காங்கிரஸ்காரர்கள் அனைத்து வகையான அக்கிரமங்களிலும் ஈடுபடுவதாகவும், அவர்கள் வரம்புமீரினால், மூன்றாவது உலகப் போரைத் தொடங்கத் தான் தயாராக இருப்பதாகக் கூறினார்.

  • 1957 செப்டம்பர் 16-ஆம் தேதி வடக்கம்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திரு. தேவர், முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நடந்த சமூக மோதல்களை நியாயப்படுத்தினார். செப்டம்பர் 10 முதல் 16-ஆம் தேதி வரை முதுகுளத்தூர், கீழத்தூவல், வீரம்பல், இலந்தைக்குளம், இருளப்பபுரம் மற்றும் செந்திக்கோட்டை ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களையே அவர் சுட்டிக்காட்டினார் என்பது தெளிவாகிறது. காங்கிரஸ் தவறான இடத்தில் போரைத் தொடங்கத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கூறிய அவர், அந்தப் பகுதி மக்கள் போர்க்குணம் கொண்டவர்கள் என்றும், இளம் வயதிலேயே பாம்களையும் தோட்டாிகளையும் எதிர்கொண்டவர்கள் என்றும் கூறினார். கடந்த காலத்தில் பெற்ற அனுபவத்தின் காரணமாகத் தமது மக்கள் காவல் துறையையோ, சிறப்புப் படையையோ அல்லது இராணுவத்தையோ கண்டு அஞ்சமாட்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். வன்முறையைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யப்பட்டால், அரசாங்கமும் அதே முறையில் பதிலளிக்கப்படும் என்றும், வன்முறையை வன்முறையால் எதிர்கொள்வார்கள் என்றும் கூறினார்.

மக்கள் 'தர்மத்தை' நிலைநாட்டுவதற்காகப் பாம்களைத் தாராளமாகப் பயன்படுத்துவார்கள் என்றும், உள்நாட்டுப் போர் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முதுகுளத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நெருக்கடியின் போது சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதற்காகக் காவல் துறையினர் பல்வேறு குற்றங்களில் சந்தேகப்பட்டவர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் கைது செய்தனர். இந்தக் கைதுகளில், தமது சொந்த ஊரான பசும்பொன்னில் தேவர்கள் கைது செய்யப்பட்டதையும், தமது சமையல்காரர் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, அரசாங்கத்தின் நடவடிக்கை தமக்குச் சவாலாக அழைப்பதற்குச் சமம் என்று திரு. தேவர் "தாய்நாடு" இதழில் அறிக்கை வெளியிட்டதாகத் தெரிகிறது.

கீழத்தூவல் கிராமத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பாக, ஐ.சி.எஸ். அதிகாரி திரு. எஸ். வெங்கடேஸ்வரன் விசாரணை நடத்தியபோது, தானும் தமது கட்சியினரும் அந்த விசாரணையில் பங்கேற்கமாட்டோம் என்று திரு. தேவர் வாய்மொழியாக அறிவித்தார். இருப்பினும், விசாரணை நடைபெற்ற கட்டடத்தின் நுழைவாயிலில் அவர் ஒரு காரில் அமர்ந்திருந்தார். இதன் விளைவாக, திரு. தேவருக்கு எதிரான சாட்சியங்களை அளிப்பதற்காக சாட்சிகள் வருவது தடுக்கப்பட்டது. திரு. தேவரின் வன்முறையைத் தூண்டும் பேச்சுகளும், அவற்றின் விளைவாகத் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களும், தமது மாவட்டத்தில் சட்ட ஒழுங்கைப் பராமரிக்கப் பொறுப்பான மாவட்ட ஆட்சியருக்கு எவ்வளவோ கவலையை ஏற்படுத்தும் என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்.

திரு. தேவர் தமது பேச்சுகளின் மூலம் வெளிப்படையாகவும், தமது ஆதரவாளர்கள் மூலம் மறைமுகமாகவும் சமூகக் கலவரங்களையும் வன்முறைச் செயல்களையும் தூண்டிவிடுவதாக மாவட்ட ஆட்சியர் கருதினார். அவர் சுதந்திரமாக வெளியே இருந்தால், அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி சமூகக் கலவரங்களைத் தூண்டவும், சட்ட ஒழுங்கையும் அமைதியையும் சீர்குலைக்கவும் வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் கருதினார். மேற்கண்ட சூழ்நிலைகளில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரைைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது சரியான நடவடிக்கையாகும்.

பாதிப்புகள் மற்றும் இழப்புப் புள்ளிவிவரங்கள்

மாண்புமிகு பேரவைத் தலைவரே, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சொத்துச் சேதங்கள் குறித்த புள்ளிவிவரங்களுக்கு இப்போது வருகிறேன்.

இரு சமூகங்களுக்கிடையே நேரடியாக ஏற்பட்ட மோதல்களில்:

  • 17 தேவேந்திர குல வேளாளர்கள் கொல்லப்பட்டனர்.

  • 8 தேவர்கள் கொல்லப்பட்டனர்.

  • காவல் துறையினருக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து நடைபெற்ற காவல் துறை துப்பாக்கிச்சூடுகளில் கொல்லப்பட்ட 13 பேரும் தேவர்கள் ஆவர்.

எரிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை வருமாறு:

  • தேவேந்திர குல வேளாளர்கள்: 2,735 வீடுகள்

  • தேவர்கள்: 107 வீடுகள்

சொத்துகளுக்கான சேதங்களின் தோராயமான மதிப்பு வருமாறு:

  1. பரமக்குடி தாலுகா: ₹11,000

  2. முதுகுளத்தூர் தாலுகா: ₹25,000

  3. சிவகங்கை தாலுகா: ₹2,51,353

  4. அருப்புக்கோட்டை தாலுகா: ₹86,350

  • மொத்தம்: ₹3,73,703

அரசாங்கத்தின் நிவாரண மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள்

சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான கவலையாக இருந்தபோதிலும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை அரசாங்கம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் ₹30 வீதம் பண நிவாரணம், மாவட்ட ஆட்சியரால் 124 கிராமங்களில் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தாலுகாக்களிலுள்ள 116 கிராமங்களில் சுமார் 12,770 மெட்ரிக் டன் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு மேலாக, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் போன்ற அரசு சாரா அமைப்புகள் பெரிய அளவிலான நிவாரணப் பணிகளைத் தொடங்கியுள்ளன. அவை பாதிக்கப்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் ஆடைகளையும் கட்டுமானப் பொருட்களையும் வழங்கி வருகின்றன. உடனடி நிவாரணப் பணிகளை ஏற்பாடு செய்வதற்காக, முதற்கட்ட நிவாரணமாக ₹50,000 ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. இந்தப் பணியில் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செய்து வரும் சிறந்த பணிகளைப் பாராட்டி, அரசாங்கம் தனது நன்றியை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறது.

இந்தப் பிரச்சனை ஆழமாக வேரூன்றியிருப்பதை அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. இந்தப் பகுதியின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். முதுகுளத்தூர் தாலுகா முழுவதையும் தேசிய வளர்ச்சித் திட்டத் தொகுதியில் கொண்டு வருவதற்கான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தப் பகுதியில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், பாசனம் மற்றும் விவசாய வசதிகளை ஏற்படுத்துதல், மின்சார வசதியை வழங்குதல் ஆகியவற்றைச் செயல்படுத்த முடியும். இந்த மேம்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் பெருமளவில் நிதி தேவைப்படும். இந்திய அரசு நமக்கு உதவிக்கரம் நீட்டும் என்று நம்புவோம்.

இந்தச் சூழ்நிலையை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்துச் சில விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் குற்றச்சாட்டுகளை வைக்கக் கூடிய காரணங்களை ஆராய்வது அவசியமில்லை; அவற்றை ஆராய நான் விரும்பவில்லை. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் வைத்துள்ள நியாயமான கருத்துகளை நான் மதிப்பாக ஏற்கிறேன். இந்தப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இனி ஒருபோதும் நிகழக்கூடாது என்றும், மாவட்டத்திலுள்ள அனைத்துச் சமூகங்களும் எதிர்காலத்தில் பூரண நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் வாழ வேண்டும் என்றும் நான் நம்புகிறேன்; அதற்காகப் பிரார்த்திக்கிறேன். இங்கு வந்துள்ள மாண்புமிகு உறுப்பினர்களும் இதே நம்பிக்கையையும் பிரார்த்தனையையும் கொண்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

3. சென்னை உயர்நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு மற்றும் சட்டப் பகுப்பாய்வு

சென்னை உயர்நீதிமன்றத்தின் இறுதி விசாரணை (15.07.2008)

அதனடிப்படையில் வழக்கு நீதிபதிகள் P.K. மிஸ்ரா மற்றும் M. சத்தியநாராயணன் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதை அறிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் தொழில் நடத்தக்கூடிய முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், நான் (விஜேந்திரன்) இந்த வழக்கில் ஆஜராவதைத் தடுப்பதற்காக முயற்சி செய்தனர். இதனை அறிந்துகொண்ட நானும் சில தற்காப்பு அணிகலன்களோடு நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தேன்.

வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கு முன்பாகவே எழும்பூரிலிருந்து வந்த வழக்கறிஞரில் ஒருவர் "என்ன இப்படி வழக்கு போட்டிருக்கிறீர்கள்?" என்று மிரட்டும் தொனியில் கேட்டார். "எதற்கும் சட்டென கோபப்படக்கூடிய நான் சற்று நிதானமாக வழக்கு முடிந்ததும் காரணம் கூறுகிறேன்" என்று அமைதியானேன். இந்த அமைதி உடலின் தோற்றத்தில் காணப்பட்டதேயொழிய மனநிலை கொந்தளிப்புடன் கேட்டவனை கை வைக்கவே துடித்துக்கொண்டிருந்தது.

Hon'ble Mr. Justice Prafulla Kumar Misra

இப்படி வெளித்தோற்றத்தில் அமைதியாக இருந்ததற்கான காரணம் மேற்கண்ட நீதிபதிகளான திரு. P.K. மிஸ்ரா மற்றும் திரு. M. சத்தியநாராயணன் ஆகியோரில் மூத்த நீதிபதி திரு. P.K. மிஸ்ராவின் சட்ட நுணுக்கத்தைப் பற்றியும் அவரின் சமூகப் பார்வையைப் பற்றியும் நான் நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததுதான். அதேபோல், திரு. M. சத்தியநாராயணனின் "விலாங்கு மீன் உருவமும் (Structure of the Eel Fish)" நன்கு அறிந்திருந்தேன்.

குறிப்பாகப் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள Chennai-One-க்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து நடத்தினேன். அப்பொழுது, உச்சநீதிமன்ற நீதிபதி கே. ராமசாமி வழங்கிய தீர்ப்பு ஒன்றை எடுத்துக்காட்டி பேசினேன். அப்பொழுது, நீதிபதி. எம். சத்தியநாராயணன் அவர்கள், "ஏன் இராமசாமி தீர்ப்பை எடுத்துக்காட்டுகிறாய் என்பது எனக்குத் தெரியும்; வேறு தீர்ப்பே இல்லையா?" என்று தன்னுடைய சாதிய உள்ளக்கிடக்கையை வெளிப்படையாகவே கூறினார். நீதிபதி. இராமசாமி அவர்களின் தீர்ப்பைப் போல் ஒரு தீர்ப்பைக் கூட திரு. எம். சத்தியநாராயணன் எழுதியிருக்க வாய்ப்பில்லை!

நீதிபதி கே. ராமசாமி

இதற்கிடையே மனுதாரர் திரு. சிம்சனை அடையாளம்தெரியாத நபர்கள் அவர் வீட்டிற்குச் சென்று மிரட்டினார்கள் என்பது வேறு கதை. அதற்காக வழக்கறிஞர் அறிவிப்பு ஒன்றையும் அரசாங்கத்திற்கு கொடுத்து அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு கொடுக்க கேட்டேன்.

என்னுடைய வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள் முத்துராமலிங்கத்தின் 100-வது பிறந்தநாள் விழாவை 28.10.2007 முதல் 30.10.2007 வரை மூன்று நாள் விழாவாக தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடுவதை இல்லாநிலை மற்றும் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரியதை ஏற்று அரசு அதை பரிசீலனை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வத் தீர்ப்புப் படிவம் (Order Copy)

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 15.07.2008

CORAM:
THE HON'BLE MR. JUSTICE P.K.MISRA
AND
THE HON'BLE MR. JUSTICE M.SATHYANARAYANAN

W.P. NO. 33699 OF 2007
and MP. NO. 1 OF 2007

A. Simpson                                    ... Petitioner
Vs.
1. The Government of Tamil Nadu
   rep. by its Chief Secretary, Fort St. George, Chennai.
2. The Government of Tamil Nadu,
   rep. by its Secretary, Department of Home, Fort St. George, Chennai.
3. The District Collector, Collectorate, Ramanathapuram.
4. The District Educational Officer, District Education Office, Ramanathapuram.  ... Respondents

ORDER
(Order of the Court was made by P.K. MISRA, J.)

Heard Mr. P. Vijendran, learned counsel appearing for the petitioner and Mrs. Geetha Thamaraiselvam, learned Government Advocate appearing for the respondents.

2. The present writ petition has been filed as a Public Interest Litigation for issuing appropriate direction or for declaration that the centenary birth anniversary of Muthuramalinga Thevar for 3 days from 28.10.2007 to 30.10.2007 as Government function as announced by the respondents 1 to 3 as void and illegal and consequently direct the first respondent not to announce any holiday for anniversaries of any community leader in-future.

3. This writ petition which was filed on 22.10.2007 is now listed for hearing during the month of July, 2008 and hence the relevant dates are already over. In view of such passage of time, it is not necessary to deal with the question raised in this writ petition. Accordingly, the writ petition is disposed of. No costs. Consequently, M.P. NO. 1 of 2007 is closed.

Sd/-
Assistant Registrar

சட்டப் போராட்டத்தின் மதிப்பீடும் அரசியல் சட்டச் சிந்தனையும்

இந்த வழக்கில் நீதிபதி P.K. மிஸ்ரா அவர்களுடன் நீதிபதி K. கண்ணன் இருந்திருந்தால் கண்டிப்பாக வழக்கின் முடிவு வேறு மாதிரியாகத்தான் இருந்திருக்கும். ஏனென்றால் அவர்களின் அறிவின் கலப்பினச் சேர்க்கை (Knowledge of hybridization) வழக்கின் பொருண்மைகளையும் சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படாமல் மாறாக வழக்கறிஞர்களின் நுண்ணறிவு, அவரின் பண்பு நலன், அவரின் சமூகநிலை, வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்குமான உறவு, நீதிபதிகளின் சமூக பின்னணி, அவரின் அரசியல் பின்புலம், வழக்கின் பொருண்மை அதன்மீது நீதிபதிகளின் மனநிலை அவற்றையெல்லாம் தாண்டி இந்திய நாட்டில் சமூக வெளியில் நீக்கமற நிறைந்திருக்கும் சாதி இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு பகரப்படுகிறது.

ஆனால், திரு. எம். சத்தியநாராயணன் எந்த வழக்கின் பிரச்சினையையும் சிரித்துக் கொண்டே சிறையிலடைத்து விடுவார். இது அவருடைய சட்டக்குணம். இதன் காரணமாகவே நீதிபதிகளின் நியமனத்தின்பொழுது "சமூக அறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும்" என்ற நிபந்தனை உள்ளது. ஆனால், எத்தனை நீதிபதிகள் இந்த நிபந்தனைக்குள் வருவார்கள் என்பது கேள்விக் குறியே?

இப்படி பல்வேறு சிரமங்களுக்கு இடையே பெறப்பட்ட தீர்ப்பை இதுவரை தமிழக அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இதற்கு முக்கிய காரணம் தேர்தலில் நிற்கும்போது அந்த மக்களின் வாக்குகளை அவரவர் கட்சிகளுக்கு பெற்றுவிட வேண்டுமென்பதேயாகும். இதில் தமிழ்நாட்டிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒரேவிதமான குரோமோசோம்களை கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய விந்தை.

பிரதான மனித சமூகம் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து சிறிது சிறிதாக வளர்ச்சி பெற்று நவீன சமூகமாக நிலைபெற்றுள்ளது. இப்படி மாறிவருகின்ற சூழ்நிலையில் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டில் எப்படி அரசியலமைப்புச் சட்டங்கள் உருவானது, அதற்காக நடந்த யுத்தங்கள் இவற்றையெல்லாம் சமூக நோக்கில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டமும் பல தியாகிகள் உயிரை எடுத்த பிறகு

நீதிபதி. வி.ஆர். கிருஷ்ண ஐயர்

உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, நாம் அனைவரும் அதைப் பின்பற்றி நடக்க வேண்டும். இதைத்தான் நீதிபதி. வி.ஆர். கிருஷ்ண ஐயர் அவர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சமூக மாற்றத்திற்கான ஆவணம் என்று State of Kerala Vs. N. M. Thomas [(1976) 2 SCC 310] என்ற வழக்கில்:

"The Indian Constitution is a great social document, almost revolutionary in its aim of transforming a medieval, hierarchical society into a modern, egalitarian democracy" என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த மண்ணின் அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் போன்ற அரசியலமைப்புச் சட்டத்தின் ஊழியர்கள் எத்தனை பேர் இந்தக் கோட்பாட்டை சிந்தனையில் ஏந்தி செயல்படுகிறார்கள் என்பது கேள்விக் குறியே.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் மற்ற துணைச் சட்டங்களையும் சமூகச் சிந்தனையோடு செயல்படுத்தினால் சாதியச் சிந்தனை செயலற்றுப்போக வாய்ப்பிருக்கிறது.

-ப. விஜேந்திரன் எழுதும் நீதியை தேடிய கதைகள் தொடரும்...

Karuppu News membership

Support independent Tamil journalism

Get one Karuppu account for News, eCourts and citizen services. Start free or choose a membership plan that supports public-interest reporting.

News access One ecosystem account
Subscribe / Join free

கருத்துகள் (0)

கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion

கருத்து பதிவிட உள்நுழையவும் — log in

0WATG