
என்னுடைய உயிரியல் தந்தை பெயர் திரு. பக்கிரிசாமியாக இருந்தாலும் என் வழக்கறிஞர் தொழிலுக்கு தந்தையாக இருந்தவர் நீதிபதி. திரு. து. ஹரி பரந்தாமன் அவர்கள். நான் வழக்கறிஞராக பதிவு செய்த பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சென்று தொழிலை உடனடியாக எளிதில் கற்றுக்கொள்வதற்கு என்னுடைய மூதாதயர்களோ பெற்றோர்களோ, வழக்கறிஞர்களாகவோ அல்லது நீதித்துறையில் எந்த வேலையோ அல்லது வேறெந்த அரசு ஊழியராகவோ இருக்கவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் பழகுதல் என்பது அவரவர் குடும்ப உறவுகளுக்குள்ளும் குறிப்பாக அவரவர் சாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே கூடுதல் முக்கியத்துவமும் அதிக வாய்ப்பும் அளிக்கப்படும். இவர்கள் மட்டுமே வழக்கறிஞர் தொழிலில் மிளிரவும் நீதிபதிகளாக பரிணாமிக்கவும் அதீத வாய்ப்புகள் அளிக்கப்படும்.
இந்த நிலையில் நான் சட்டக்கல்வி முடித்து விட்டு இளம் வழக்கறிஞராக திரு. து. ஹரிபரந்தாமனிடம் சேர்ந்து தொழில் பழக ஆரம்பித்தேன். அவருடைய அலுவலகத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து தொழிலில் ஊக்கமளித்தவர் மறைந்த திரு. அஜய் கோஷ் அவர்கள். அவர் காலந்தவறாமை, உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவது வழக்குகளை ஆழ்ந்து படிப்பது அதேபோன்று நீதிமன்றங்களில் வழக்காளிகளுக்கு குறிப்பாக தொழிலாளர்களுக்காக சமரசம் இன்றி சட்டப்பூர்வமாக தீர்வை கொடுக்கும் வகையில் நேர்த்தியோட தொழில் நடத்தியதெல்லாம் சிறுக சிறுக என் உள்ளம் உள்வாங்கிக் கொண்டது.
அதே நேரத்தில் யாராக இருந்தாலும் சரியானதை நேருக்கு நேராக வெட்டென்று சொல்லிவிடுவார், கூடுதலாக அவர் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ் ) கட்சியில் மாணவர் பருவத்தில் இருந்தே ஆழ்ந்த ஈடுபாடு உடையவராக இருந்தார். இந்த கட்சி அமைப்பும் அவரின் தொழில் தரத்திற்கு உறுதுணையாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக ஒரு வாய்ப்பு கிட்டியது. இதற்கு முன்பாகவே நான் 2001-ஆம் ஆண்டு தனியாக வழக்கறிஞர் தொழில் செய்ய தொடங்கினேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியாக வழக்கறிஞர் தொழில் நடத்துவது என்பது நடுக்கடலில் வீசும் கடும் புயலில் பாய்மரப் படகில் கரையேற துடிப்பதற்கு சமமாகும். அதே வேலையில் திருமணம் செய்து கொண்டு நிற்கதியற்று தனியாக நின்று கொண்டிருந்தது மறுபக்கம். ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கு வாடகை கொடுப்பது, அன்றாட செலவுகளை கவனித்துக் கொள்வது, இவையெல்லாம் கடலில் புயலடிப்பது மட்டுமல்ல அதே நேரத்தில் மலையும் பொழிந்து பாய்மரப் படகை கரையேறுவதை தடுத்து நிறுத்தும்.
எனவே கிடைக்கின்ற வழக்குகளை திறம்பட நடத்துவதும் எப்படியாவது உத்தரவு வழக்காலிகள் சார்பாக பெறுவது மட்டுமே குறிக்கோளாக இருக்கும். அதாவது வள்ளுவர் மொழியில் சொன்னால்
வினைதிட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றை எல்லாம் பிற.-குறள் எண்-661இப்படி இருமுனை தாக்குதல்களாக தொழிலும் வாழ்க்கையும் நடந்து கொண்டிருந்த போதுதான் நாகப்பட்டினம் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. எம். செல்வராஜ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு "கிளிரீயம் விநாயகர் கோவிலுக்கு குடமுழுக்கு நடக்க இருப்பதாகவும் அதற்காக அந்த கோவிலுக்கு அருகில் உள்ள பட்டியல் சாதியின மக்களின் வீடுகளை அகற்றிவிட்டு குடமுழுக்கு நடத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள்" என்று கூறினார். மேலும் சற்று கனத்த குரலில் "பிரபாகரன் என்ற ஒருவரை அனுப்பி வைக்கிறேன். அவர் மூலமாக இந்த கோவிலின் குடமுழுக்கை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார்.

அவர் கூறியது போல் மறுநாள் பிரபாகரன் என்னுடைய அலுவலகத்திற்கு காலை 8 மணிக்கு வந்து சேர்ந்தார். வழக்கை விசாரித்து ஆவணங்களை பெற்று உடனடியாக ஆணையுறுதியுரையும் தயார் செய்து வழக்கை 05.07.2010 அன்று நீதிப்பேராணையாக தாக்கல் செய்தேன். அப்பொழுது பிரபாகரனுக்கு வயது 22. அவர் இளநிலை வணிகவியல் நிர்வாகம் (BBA) படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் வீட்டை இடித்த ஆழ்ந்த வேதனையில் இருந்தாரே அன்றி அந்த கோவிலை பற்றிய முழுமையான விவரங்கள் அவரிடம் இல்லை.
அதாவது அந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறதா? அல்லது கிராம பொதுக் கோவிலாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? என்பது தெரியவில்லை. அந்த வழக்கு தயாரிக்கும் பொழுது அந்த விவரங்களை அவரிடம் பெற்று வர சொல்ல போதிய காலமும் இல்லை. ஏனென்றால் அந்த கோவிலின் குடமுழுக்கு 16.07.2010 அன்று நடக்க இருந்தது. எனவே இருக்கின்ற ஆவணங்களை மட்டும் வைத்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரை முதல் எதிர்மனுதாரராகவும் குடவாசல் வட்டாட்சியர் அவர்களை இரண்டாவது எதிர்மனுதாரராகவும் எடுப்பார் கைப்பிள்ளையாக செயல்பட்ட திரு பிரபாகரனின் வீட்டை அந்த இடத்திலிருந்து அகற்றுவதற்கு கிரியா ஊக்கியாக செயல்பட்ட S. சங்கர் அவர்களை மூன்றாவது எதிர்மனுதாரராகவும் மட்டும் சேர்த்து நீ.பே. எண்.14686/2010-ஐ தாக்கல் செய்தேன்.

அந்த வழக்கில் பிரபாகரனுடைய வீட்டை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தக்கூடாது என்றும் அதன் இடைக்காலமாக ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ கருப்பாயிரம் (எ) அய்யனார் என்ற கோவிலுக்கு குடமுழுக்கு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் இடைக்கால உறுத்துக்கட்டளை கோரியிருந்தேன்.
இப்போது எழுதப்பட்டிருக்கும் இந்த எழுத்து வடிவ நிகழ்வை படிப்பவர்களுக்கு வீட்டை காலி செய்வதற்கும் கோவில் குடமுழுக்கு நடத்துவதற்கும் என்ன தொடர்பு இருக்கின்றது? என்று அப்பாவியாக நினைக்கத் தூண்டும். இதில் தான் சூட்சமம் இருக்கிறது.
அதாவது சித்தி விநாயகர் கோவில் தெருவில் முதல் வீடாக பிரபாகரன் என்பவர் வீடு இருப்பதால் அதை சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கிற்கு முன்பாகவே இடித்துவிட வேண்டும் என்பது அங்குள்ள சாதி இந்துக்களின் வேட்கை. ஆனால் பிரபாகரன் வீடு கோவில் நிலத்திலோ அல்லது கோவிலுக்கு அருகாமையிலோ இல்லை. அந்த நேரத்தில் பிரபாகரன் அந்த வீட்டிற்கு பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியரிடமும் குடவாசல் வட்டாட்சியரிடமும் தொடர்ச்சியாக மனு செய்து கொண்டிருந்தார். இந்த வேளையில் சித்தி விநாயகர் கோவிலின் குடமுழுக்கை காரணம் காட்டி வீட்டை இடிப்பதற்கு முயற்சி செய்தார்கள். எனவே தான் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவ்வழக்கு நீதிபதி. திரு. தனபாலன் முன்பாக 09.07.2010 அன்று விசாரணைக்காக தற்போதைய நீதிமன்ற எண் 10-ல் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் கோவில் குடமுழுக்கு நடத்தக்கூடாது என்று இடைக்கால உறுத்து கட்டளை (Interim Injunction) வழங்கினார். குடமுழுக்கிற்கே தடை என்பதால் குடமுழக்கிற்காக காத்திருந்த அனைவரும் சிதம்பரம் நடராஜராக மாறினார்கள்.

உடனே குடமுழுக்கு எப்படியாவது அதே தேதியில் நடத்தி விட வேண்டும் என்று திட்டமிட்டார்கள் சாதி இந்துக்களும் பார்ப்பன புரோகிதர்களும். இதற்கு பொருத்தமாக வழக்கு நடத்தக்கூடிய வழக்கறிஞர் ஒருவரை உயர் நீதிமன்றத்தில் தேர்ந்தெடுத்தனர். அவர்தான் R.சுப்பிரமணியன். [அவர் பிறகு நீதிபதியாகப் பதவியேற்று ஓய்வும் பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.]
சித்தி விநாயகர் கோவில் குடமுழுக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி அவரை அணுகியதனால் "தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்" என்பதற்கிணங்க அவர் உடனடியாக கோவில் குடமுழக்கினை நடத்துவதற்கான கோவில் தரப்பு தகவல்களை கூறி இடைக்கால உறுத்துக்கட்டளை நீக்க மனு தாக்கல் செய்திருந்தார். அப்பொழுது நீதிபதியாக பதவி வகுத்தார் நீதிபதி து.அரி பரந்தாமன் அவர்கள். குடமுழுக்கு நான்கு வார கால இடைக்கால உறுத்துக்கட்டளை கொடுக்கப்பட்டிருந்தாலும் குடமுழுக்கை 16.07.2010 அன்று தான் நடத்த வேண்டும் என்ற குறிக்கோளில் நீதிபதியிடம் காலை 10:30 மணிக்கு வேண்டுதல் (Mentioning] கோரி அன்றே உறுத்துக்கட்டளை நீக்கம் செய்யும் இடைக்கால மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டி இருந்தார்.
நீதிபதியும் அவர் கோரிக்கையை ஏற்று மனுதாரின் வழக்கறிஞரான எனக்கு அவர்கள் தாக்கல் செய்திருந்த ஆணையுறுதியுரையையும் ஆவணங்களையும் சார்வு செய்ய உத்தரவிட்டிருந்தார். இது நீதிமன்ற நடைமுறை மட்டுமல்ல இரு தரப்பையும் கேட்கும் [Audi alteram partem] கோட்பாட்டிற்கு உட்பட்டதாகும். எனவே எனக்கு நற்பகல் 01.30 மணியளவில் வழக்கு ஆவணங்கள் சார்வு செய்யப்பட்டு 02.15 மணியளவில் விசாரணைக்கு வருவதாகக் கூறினார்கள். உடனே வழக்கறிஞர். R.சுப்பிரமணியத்திற்கு ஆடிய அதே தசை எனக்கும் ஆடியது.
உடனே நான் வழக்கு ஆவணங்களை சார்வு செய்தவரிடம், "02.15 மணிக்கு வர இயலாது; ஏனென்றால் தற்போது தான் என்னிடம் ஆவணம் கொடுக்கப்பட்டுள்ளது; அதன் பிறகு வருகிறேன். " என்று கூறினேன்.
அப்பொழுதுதான் என்னுடைய அலுவலகத்தில் சரவணன் என்ற இளம் வழக்கறிஞர் சேர்ந்திருந்தார். அவருக்கு வழக்கு தொழிலில் எந்த அனுபவமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தபோதிலும் "சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பதனடிப்படையில் அவரும் நானும் அமர்ந்து அவர்கள் கொடுத்த ஆவணங்களை படித்து புரிந்து கொண்டு நீதிமன்றத்திற்கு சென்றோம். வழக்கு 04.00 மணியளவில் 17-வது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. நான் எனக்கே உரிய பாணியிலும் வழக்கறிஞர் R.சுப்பிரமணியன் அவருக்கே உரிய தொணியிலும் பேசினார்.
வழக்கின் ஒரு குறிப்பிட்ட நிலையில் நீதிபதி. து. அரி பரந்தாமன் அவர்கள் தலையிட்டு, "இந்த வழக்கில் விஜேந்திரனின் பக்கம் தான் நியாயம் இருக்கிறது; அதாவது விஜேந்திரனின் வழக்காளியின் பக்கம்; என்றும் நீங்கள் இரு தரப்பினரும் சம்மதித்தால் (If both party concerns] எப்பொழுது வேண்டுமானால் என் வீட்டுக்கு வரலாம்" என்றும் கூறி மாலை நிறைவு மணி ஒழித்ததால் இறங்கிவிட்டார்.
மறுநாள் காலை வழக்குப் பட்டியலில் 4-வது வழக்காக எங்கள் வழக்கு எண்ணிடப்பட்டிருந்தது. இப்பொழுதுதான் வழக்குகள் பல்வேறு மின்சாதன பொறிகளால் முதல் நாள் மாலையிலேயே எந்தெந்த வழக்குகள் எந்தெந்த வழக்கறிஞர்களுக்கு வருகிறது என்று தெரிந்து விடுகிறது. ஆனால் 2010 ஆம் ஆண்டுகளில் எல்லாம் ஒவ்வொரு நாள் காலையிலும் வழக்கறிஞர்களுக்கு 400 முதல் 500 வரை பக்கங்கள் கொண்ட வழக்குகளின் பட்டியல் அவரவர் அலுவலகத்தில் நாளேடுகள் போடுவது போல் வழங்கப்படும். அதற்கு வழக்கறிஞர்கள் ஒவ்வொருவரும் மாத மாதம் பணம் செலுத்த வேண்டும்.

இப்படி போடப்படுகின்ற வழக்கு பட்டியலில் ஒவ்வொரு வழக்கறிஞரும் அவர்களுக்குள்ள வழக்கை தேடி கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு குறைந்தது 30 நிமிடங்களில் இருந்து 40 நிமிடங்கள் எடுக்கும். ஆனால் அந்த சிரமங்களை எல்லாம் இப்பொழுது உள்ள இளவர்கள் எதிர்கொள்வதற்கான வாய்ப்பே இல்லை.
இப்படியாக அப்பொழுது அலுவலகங்களில் ஒருவராக இருந்த இளவர் கு. சரவணன் காலை 8 மணிக்கு அலுவலகம் வந்து எனக்கு தொலைபேசி செய்து அந்த வழக்கு 4-வது எண்ணாக 17-வது நீதிமன்றத்தில் நீதிபதி. அரி பரந்தாமன் முன்னிலையில் வருவதாக கூறினார். இதைக் கேட்டதும் சற்று அதிர்ச்சியடைந்தேன். எப்பொழுதுமே 8-லிருந்து 9 மணியளவில் அலுவலகம் வரக்கூடிய நான் இரவு கடும் காய்ச்சல் ஏற்பட்டு அதன் அதிக தாக்கத்தினால் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு இருந்தது. எனவே, நான் சரவணனிடம் பொது மருத்துவமனைக்கு சென்று வருகிறேன். இந்த காரணத்தை கூறி வழக்கை எடுத்து வைக்க[Pass over] நீதிமன்றத்திடம் கேட்குமாறு தொலைபேசியில் கூறினேன்.
இளவர் கு. சரவணன் அப்பொழுதுதான் சட்டப் படிப்பை முடித்துவிட்டு அலுவலகத்தில் சேர்ந்திருந்தார். சரவணன் பேசுவதையோ சிரிப்பதையோ யாரும் பார்த்திருக்க முடியாது. அதாவது அத்திப்பூத்தார் போல் இருப்பார் யாரையும் கடிந்து கூட பேச மாட்டார். வழக்காளிகளிடம் கூட சில தரவுகளை வரவழைக்க என்னிடம் கூறி அவர்களிடம் கேட்கச் சொல்வார். காரணம் அவரது இயல்பான பண்பும் அதுவே. அவர் வழக்கறிஞர் தொழிலுக்கும் மிக மிக புதியவர். சில வழக்கறிஞர்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் ஆன பிறகும் கூட நீதிமன்றத்தில் பேச இயலுவதில்லை.
இதுபோன்ற பண்புகளை கொண்டிருக்கும் சரவணன் 17-வது நீதிமன்றத்தில் வழக்கு அழைக்கப்படும் போது, நீதிபதியிடம் உரிய காரணத்தைக் கூறி வழக்கை எடுத்து வைக்குமாறு [Pass over] கூறியுள்ளார். எதற்கெடுத்தாலும் பதட்டப்பட்டு பேசும் (Tensionable reaction] நீதிபதி அவர்கள் அஃறிணையில், "நேற்று மாலை வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமல் ஏமாற்றி விட்டான்" என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளை கேட்டதும் இளகிய நெஞ்சம் கொண்ட இளவர் கு. சரவணனுக்கு கண்ணீரிடுவது மட்டுமே அந்நேரத்தில் வடிகாலாக அமைந்துள்ளது.
உடனே சரவணன் எனக்கு தொலைபேசி செய்தார். நான் எதிர்பார்த்தது, ஒன்று வழக்கானது தள்ளுபடி செய்திருக்கப்பட வேண்டும் அல்லது எடுத்து வைத்திருக்க வேண்டும் இதற்காகத்தான் தொலைபேசி விடுத்தார் என்று எண்ணினேன். ஆனால் சரவணனின் அழுகுரல் மட்டுமே தொலைபேசியில் கேட்டது.
அதை தொலைபேசியில் கேட்டு பதற்றப்பட்டு “எதற்காக அழுகிறாய்? என்ன நிகழ்ந்தது" என்று கேட்டேன். அதற்கு அவர் நீதிபதி மோசமாக திட்டுவதாகவும் உடனே உங்களை ஆஜராகுமாறு கூறியதாகவும் அழுவதை நிறுத்தாமலேயே கூறினார். அப்பொழுது நீதிபதி என்ன பேசினார் என்பதெல்லாம் எனக்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால் என் இளவர் அழுததை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மருத்துவமனையில் வரிசையில் நின்ற நான் உடனடியாக அங்கிருந்து பேருந்தின் மூலம் நீதிமன்றத்திற்கு புறப்பட்டு வந்தேன். வழக்கறிஞர் சீருடை ஏதும் அணியாமல் நேரடியாக 17-வது நீதிமன்றத்திற்கு சென்றேன். அக்டோபர் மாதம் மழைக் காலம் என்பதால் ஒரு கையில் குடை மறுக்கையில் மதியத்திற்கு தேவையான அறுசுவை உணவு கொண்ட பை வைத்திருந்தேன். மனதிற்குள் யானைக்கு மதம் பிடித்தது போன்ற உணர்வு, காரணம் என் இளவரை திட்டி அழ வைத்தது.
அப்பொழுது என் மனதில் நீதிபதி யார்? வழக்கறிஞர் யார்? நீதிமன்றத்திற்கு வழக்கு நடந்து கொண்டிருக்கிறதா? இல்லையா? என்ற எந்த பிரக்ஞையும் இல்லை. நேரடியாக நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதியை பார்த்து, "என் ஜூனியரை என்ன பேசினீர்கள்" என்று எனக்கே உரிய தொணியில் உரக்க கேட்டேன். இயல்பாகவே உரத்த குரலில் பேசும் நான் இதைவிட இரட்டிப்பு ஓசையை (Decibel) கொண்டு பிளிறினேன் நீதிபதி அவர்களுக்கு ஏற்கனவே என்னுடைய குரல் பரிட்சயம் பெற்றது தானே... ஏனென்றால் அவரிடம் மூன்றாண்டு காலங்களும் என்னுடைய இளவர் பொழுதின்போது கேட்ட குரல்.
எனவே நீதிபதி சீருடை அணிந்த வழக்கறிஞர்களையே பார்த்து, அவர் கண்கள் என்னை தேடின. ஆனால் நான் சீருடை அணியாமல் நின்றதனால் அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. இறுதியாக சீருடை அணியாமல் நிற்கும் என் உருவத்தை பார்த்துவிட்டார். உடனே தலையை குனிந்து கொண்டு, "வழக்கறிஞர் சீருடை அணியாமல் நான் யார் பேசுவதையும் கேட்க மாட்டேன்" என்று கூறினார். உடனே நான் பதிலுக்கு சீருடை அணிந்து வருகிறேன் என்றுகூறி நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்து விட்டேன். இளவர் சரவணனும் நானும் அலுவலகம் வந்து வழக்கு கோப்புகளை நன்றாக படித்துவிட்டு முதல் நாள் நடந்த நிகழ்வுகளை ஒருமுறை மீட்டுருவாக்கம் செய்து கொண்டோம்.

அதன் பிறகு மதிய உணவு சாப்பிட்டபின் 02.15 மணிக்கு நீதிமன்றத்திற்கு சென்றோம். நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பாகவே நீதிமன்றத்தில் கூட்டம் நிறைந்து வழிந்தது. அதற்கு காரணங்கள் பல. மிகச் சிறிய நீதிமன்றம்; நீதிபதியோ தாராள மனுசுடன் தீர்ப்பு வழங்குபவர்; கூடுதலாக இந்த வழக்கிற்கு கூடிய கூட்டம் 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கும்; அனைவருமே கோவில் சார்ந்து வந்தவர்களே நீதிமன்றத்தில் கிழக்கு முகம் பார்த்து நீதிபதி அமர்ந்திருந்தார்.
நீதிமன்றத்தின் வாயில் தெற்கு புறம் இருக்கும். வாயில் பக்கம் நுழைந்த உடன் கூடுதல் அரசு வழக்கறிஞர் திரு. வி. ஸ்ரீகாந்த் மற்றும் கோவிலுக்கு வாதிடக் கூடிய வழக்கறிஞர். R.சுப்பிரமணியனும் அவருடைய வகையறாக்களும் கூடியிருந்தனர். மேலுடை இன்றி குவிந்திருந்தனர். நானும் சரவணனும் நீதிமன்றத்தில் நுழைந்து வலது புறமாக சென்று வடக்கு பக்கமுள்ள வழக்கறிஞர்காளின் இருக்கையில் தென் திசை நோக்கி அமர்ந்தோம். அரசு வழக்கறிஞர் மற்றும் வழக்கறிஞர் R.சுப்பிரமணியன் ஆகியோர் தெற்கில் அமர்ந்து வடக்கிருந்தனர்.
நீதிமன்றத்தில் மதிய வேலை 02.15 மணி ஒலித்தவுடன் வழக்கிற்காக நீதிபதி அவர்கள் இயல்பான சுறுசுறுப்புடனும் ஆனால் இயல்புக்கு மாறான முகத்தோற்றத்துடனும் வந்த அமர்ந்தார். அமர்ந்த உடனையே என்னை நோக்கி, "நேற்று என்னுடைய இரண்டு மணி நேரத்தை வீணடித்து விட்டாய்" என்று கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நின்றேன். மீண்டும் அவர் அதே வாசகத்தை கோபத்துடனும் ஆக்ரோஷமாகவும் கூறினார். நான் உடனே "நான் யாருடைய நேரத்தையும் வீணடிக்கவில்லை; அதற்கான தேவையும் இல்லை;' என ஆங்கிலத்தில் கூறினேன்.
உடனே அவர், "நேற்று என் வீட்டிற்கு வருகிறேன் என்று எதிர் தரப்பு வழக்கறிஞரிடம் கூறிவிட்டு நீ வரவில்லை; அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர் தரப்பு வழக்கறிஞர் என அனைவரும் வந்திருந்தார்கள்; எனவே இதனால் நானும் அவர்களுடன் இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்." என்று கூறினார். நான் அதற்கு பதிலுறையாக, "நான் எந்த நீதிபதியின் வீட்டிற்கும் செல்வதுமில்லை; யாரிடத்திலும் நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறவும் இல்லை; அப்படி கூறியிருந்தால் யாரிடம் கூறினேன் என்று சொல்லுங்கள்; இப்பொழுதே திறந்த நீதிமன்றத்தின் முன்னிலையில் காலில் விழுகிறேன்" என்றேன். ஆனால் நீதிபதியின் காதுகளுக்கு நான் கூறுவதை ஏற்க இயலவில்லை மீண்டும் அவர் பச்சைக்கிளி போல் "என்னுடைய இரண்டு மணி நேரத்தை வீணடித்து விட்டாய்" என்று 3-வது முறையாக கூறினார்.
இதற்கு மேல் அந்த வாசகத்தை மீண்டும் கேட்க என் நெஞ்சுக்கு பொறுமை இல்லை. எனவே "இரண்டு மணி நேரம் காத்திருந்ததற்கே எவ்வளவு கோபப்படுகிறீர்கள் 2000 ஆண்டுகளாக காத்திருக்கிறோமே எங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்" என்று அசாத்திய குரலில் நீதிமன்றத்தின் செவிப்பறைகள் கிளியும் அளவிற்கு கத்தினேன். இந்த வாசகத்தின் உள்ளடக்கம் யாருக்கு தெரிந்ததோ தெரியவில்லையோ, நீதிபதிக்கும் எதிர்தரப்பு வழக்கறிஞர் R.சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றாகவே தெரிந்தது. ஏனென்றால் நீதிபதி அரி பரந்தாமன் அவர்கள் இடதுசாரி கோட்பாட்டில் ஆழ்ந்த பற்றும் அறிவுமுடையவர். எனவே அவருக்கு அளவு மாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது என்பதை சட்டென உணர்ந்து கொண்டார்.
வழக்கறிஞர் R. சுப்பிரமணியன் வலதுசாரி கோட்பாடு உடையவர். வழிவழியாக கோவில் அதிகாரத்தையும் நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் சுவைத்துக் கொண்டிருப்பவர்கள். எனவே, வழக்கறிஞர் R.சுப்பிரமணியத்திற்கு தெரிந்து விட்டது, "விஜேந்திரன் நீதிமன்றத்தின் ஓட்டத்தை கலைத்து விட்டான்; குடமுழுக்கு உத்தரவு பெற முடியாது என்று." இயல்பாகவே சற்று வெளியே நிறமாக இருக்கக்கூடிய அவர் முகம் பழுக்க காய்ச்சிய இரும்பு போல் சிவந்தது
உடனே அவர் அவருக்கு பின் என்றிருந்த அவருடைய வழக்காளிகளான கோவில் அர்ச்சகர்களை பார்த்து, "டேய்! ரவுடி பசங்களெல்லாம் நீதிமன்றத்திற்கு வந்துட்டானுங்க; இனிமேல் நீதிமன்றத்தில் எல்லாம் தீர்ப்பு பெற முடியாது; நீங்க போய் கோவில் பூட்டை உடைத்து குடமுழுக்கு நடத்துங்கள்." என்று பாரம்பரியத் திமிரோடு கூறினார்.
உடனே நான் பதிலுக்கு இயற்கையான சமூகக் கோவமும் மார்க்சிய கோட்பாட்டோடும் இருப்பதால் என் கட்சிக்காரர்களை பார்த்து, "டேய்! எவன் வந்து கோவிலை உடைத்தாலும்; அந்த இடத்திலேயே அவனுக்கு கையை வெட்டுங்கடா; அந்த காலம் இல்ல; இது நம்ம காலம் டா;" என்று ஆக்ரோஷத்துடன் கூறினேன்.
நீதிமன்றம் நிசப்தமானது. நீதிபதி திரு. அரிபரந்தாமன் அவர்கள் கலை இழந்துவிட்டார். தழுதழுத்த குறளில் இரு கரங்களை கூப்பி கும்பிட்டு என்னால் எந்த கொலையும் விழவேண்டாம் எங்கே RDO?" என்று அவரை அழைத்து கோவிலை நிரந்தரமாக பூட்டுமாறு உத்தரவிட்டார். நான் முதலில் வழக்கு தக்கல் செய்யும் பொழுது திருவாரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அவர்களை எதிர்மனுதாரரக சேர்க்கவில்லை. ஆனால், நீதிமன்றம் வழக்கின் நிலைமையை புரிந்துகொண்டு வருவாய்க் கோட்டாட்சியரையும் குடவாசல் வட்டாட்சியரையும் நீதிமன்றம் தானாகவே (Suo-motu) எதிர்மனுதாரர்களாக சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சேர்ந்து இடிக்கப்பட்ட பிரபாகரனின் வீட்டை மீண்டும் புணரமைத்தனர். இந்தத் தகவல் குறித்து குடவாசல் வட்டாட்சியர் அவர்கள் ஆணையுறுதியுரை ஒன்றை நீதிமன்றத்தி சமர்ப்பித்தார். அதனடிப்படையில் வழக்கு 26.08.2010 அன்று கூடுதலாக எந்த உத்தரவும் தேவையில்லை என்று இறுதியாக முடித்துவைக்கப்பட்டது.


வழக்கு தான் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டதே தவிற மூடிய கோவிலைப்பற்றியோ அதுதொடர்பான சமூக சிக்கலைப் பற்றியோ நீதிமன்றம் வாய்திறக்கவில்லை. ஆனால், கிளரியம் பகுதி மக்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு முடிவிற்கு வந்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவியோடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் குடமுழுக்கு ஆறு மாதத்திற்கு பிறகு இனிதே நிறைவேரியது. இந்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் பிரிவு இந்துசமய அறநிலையத்துறையின் பட்டியலில் உள்ள கோவிலாகும்.ஆனால், இந்த தகவலை மாவட்ட ஆட்சியரோ அல்லது கோட்டாட்சியரோ அல்லது மற்ற எவரோ நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. வழக்குகள் முடிந்து மனுதாரரான பிரபாகரன் கோவிலைப்பற்றிய தகவலை சேகரிக்கும்பொழுது தான் கடவுளைப் பற்றிய முழுவிவரம் தெரியவருகிறது.
"கடவுளே கண் திறந்து இருகரம் விரித்து அனைவரையும் ஆறத்தழுவிட அழைத்தாலும் இடைமறிப்பது இடைத்தரகர்களே"
நீதிமன்றம் இந்த வழக்கை பரிசீலனை செய்யும் பொழுது குறைந்தபட்சம் தமிழ்நாடு கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம், 1947, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம், 1987, இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1950 சரத்து-17 ஆகிய சட்டங்களை பரிசீலனை செய்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை நிலை நாட்டிய ஒரு தீர்ப்பாக இந்த வழக்கை மற்றியிருக்க முடியும். ஆனால், நீதிமன்றத்திற்கு மனம் வரவில்லையா? மார்க்கம் தெரியவில்லையா? என்பது தான் புலப்படவில்லை!
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றிஇன்பம் பயக்கும் வினை.-குறள் எண்-669பொருள்:இறுதியில் இன்பம் பயக்கும் தொழிலை செய்ய்யும் பொழுது முதலில் துன்பங்க்களால் வருத்தமடைய நேர்ந்தாலும் அதனை மனத்துணிவுடன் செய்து முடிக்க வேண்டும்.
-வழக்கறிஞர் ப. விஜேந்திரனின் நீதியை தேடிய கதைகள் தொடரும்..

கருத்துகள் (0)
கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion
கருத்து பதிவிட உள்நுழையவும் — log in