🔴
•திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உச்சநீதிமன்றத்தின் 27.11.2026 அதிரடி உத்தரவு – ஒரு புள்ளி விடாத முழுமையான சட்டப் பகுப்பாய்வு•🔴 100 ஆண்டு மரபைச் சிதைக்கும் உச்சநீதிமன்றம்! மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். சதியா? – திருமுருகன் காந்தி கடும் கண்டனம்!•பாஜக - திமுக ரகசிய டீல்! விஜய் அரசை கவிழ்க்க 'சந்திரமுகி'யாக மாறிய சவுக்கு சங்கர்? - அரசியல் பிரேத பரிசோதனை!•அறிவோம் ஆர்டிஐ — அத்தியாயம் 2: ஜனநாயகத்தின் திறந்த கதவுகள்•🔴 மெட்ராஸ் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் அதிரடி! கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!•🔴 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா: இந்திய ஜனநாயகத்தின் மரண மணியா? கபில் சிபல் கடும் எச்சரிக்கை!•வழக்கறிஞர் ப. விஜேந்திரன் எழுதும் நீதியை தேடிய கதைகள்: மருமகள் உடைத்த பொன்குடம்•🔴 ₹400 கோடி பள்ளி மோசடி வழக்கு! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு•திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: அறங்காவலர் குழு சஸ்பெண்ட்; தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 15 உயர் அதிகாரிகளுக்கு அவமதிப்பு நோட்டீஸ்!•🔴 ரூ.1,020 கோடி ஊழல் சூறாவளி! கே.என்.நேருவின் சகோதரர் உதவியாளர் கைது – டெண்டர் திறப்பதற்கு முன்பே ஒப்பந்தங்கள் கொடுத்த ரகசியம் அம்பலமா?•திருப்பரங்குன்றம் தீப வழக்கு: உச்சநீதிமன்றத்தின் 27.11.2026 அதிரடி உத்தரவு – ஒரு புள்ளி விடாத முழுமையான சட்டப் பகுப்பாய்வு•🔴 100 ஆண்டு மரபைச் சிதைக்கும் உச்சநீதிமன்றம்! மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ். சதியா? – திருமுருகன் காந்தி கடும் கண்டனம்!•பாஜக - திமுக ரகசிய டீல்! விஜய் அரசை கவிழ்க்க 'சந்திரமுகி'யாக மாறிய சவுக்கு சங்கர்? - அரசியல் பிரேத பரிசோதனை!•அறிவோம் ஆர்டிஐ — அத்தியாயம் 2: ஜனநாயகத்தின் திறந்த கதவுகள்•🔴 மெட்ராஸ் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் அதிரடி! கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!•🔴 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா: இந்திய ஜனநாயகத்தின் மரண மணியா? கபில் சிபல் கடும் எச்சரிக்கை!•வழக்கறிஞர் ப. விஜேந்திரன் எழுதும் நீதியை தேடிய கதைகள்: மருமகள் உடைத்த பொன்குடம்•🔴 ₹400 கோடி பள்ளி மோசடி வழக்கு! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு•திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: அறங்காவலர் குழு சஸ்பெண்ட்; தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 15 உயர் அதிகாரிகளுக்கு அவமதிப்பு நோட்டீஸ்!•🔴 ரூ.1,020 கோடி ஊழல் சூறாவளி! கே.என்.நேருவின் சகோதரர் உதவியாளர் கைது – டெண்டர் திறப்பதற்கு முன்பே ஒப்பந்தங்கள் கொடுத்த ரகசியம் அம்பலமா?
KARUPPU NEWS
வழக்கறிஞர் ப. விஜேந்திரன் எழுதும் நீதியை தேடிய கதைகள்: மருமகள் உடைத்த பொன்குடம்
EDUCATIONLIVE

வழக்கறிஞர் ப. விஜேந்திரன் எழுதும் நீதியை தேடிய கதைகள்: மருமகள் உடைத்த பொன்குடம்

1989-ம் ஆண்டு நடந்த ஆடம்பரத் திருமணம்; கடன், கள்ளக் காதல் குற்றச்சாட்டு மற்றும் உடல்ரீதியான தாக்குதல் வரை சென்ற விவாகரத்து வழக்கில், நீதிபதி பிறப்பித்த அரெஸ்ட் வாரண்ட்டை வழக்கறிஞர் ஒருவர் ₹1 லட்சம் கேட்புக் காசோலையை சமர்ப்பித்து ரத்து செய்த நெகிழ்ச்சி நிகழ்வு!

Published

27 Nov 2026

சுமார் 13 மணி நேரத்தில்

Updated

27 Nov 2026

3 நிமிடம்Editorial Policy
0

"நிகழ்ந்த சுக்கில ஆண்டு ஆணி திங்கள் 8-ஆம் நாள் (22.06.1989) வியாழக்கிழமை திருவோணம் நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் காலை மணி 8-க்கு மேல் 9.30-க்குள் கடக லக்னத்தில் திருவளர்செல்வம் கணேசனுக்கும் திருவளர்செல்வி ஷாலினிக்கும் சேஷ ஹோம ஆசீர்வாதத்துடன் சுற்றம் சூழ திருமணம் நடைபெற்றது".


கல்யாண பத்திரிகை

இப்படித்தான் நம் சமூகத்தில் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களுடைய எதிர்காலத்தில் எல்லா வளங்களும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீரும் சிறப்புமாய் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், இயற்கை சில நேரங்களில் தன்னுடைய விளையாட்டை சுப முகூர்த்த திருமணங்களை ஆடுகளமாக மாற்றிக் கொள்கிறது. அதே வேளையில் அம்மி மிதிக்காமல் அருந்ததி பார்க்காமல் சீர்திருத்தம் என்ற பெயரில் மாலை மாற்றி செய்யப்படும் திருமணங்களிலும் நேர்மறை எதிர்மறை விளையாட்டுகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.


ஜானகி மற்றும் கணேசன்

கணேசன்

ஆனால், கணேசனின் சுப முகூர்த்த திருமணத்தில் திருவளர்செல்விதான் வில்லியாக விஸ்வரூபம் எடுத்து விட்டார். கணேசனின் குடும்பம் மலேசியா சென்று நகைவணிகம் நடத்தி செல்வச் செழிப்போடு இருந்தனர். இந்தக் குடும்பத்தின் இருத்தல் என்பது இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தில் வருகின்ற கதாபாத்திரமான கோவலனின் குடும்பத்தை ஒத்த செல்வச்செழிப்புடையது. ஆனாலும், கணேசனின் தந்தை மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மருமகளைத் தேடாமல் தன் தாய் தமிழ் மண்ணான அதுவும் சமநீதி கண்ட சோழன் மண்ணிலேயே திருவளர்ச்செல்வி. ஷாலினியை மணமகளாகத் தேர்வு செய்தார்கள்.

மேலே கண்டவாறு திருமணமும் அரங்கேறியது. அதன் பிறகு கணேசனின் தாய் தன்னுடைய மருமகள் சௌபாக்கியவதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஷாலினியை ஜானகியாகப் பெயர் மாற்றினார். முதல் பெயரும் மறு பெயரும் வடமொழிதான். ஆனாலும் தமிழச்சி தான். தமிழச்சியே ஆனாலும் அவருக்குத் தற்செயலான தற்குறித்தனம் ஏனோ தலை தூக்கிவிட்டது. விளைவு வாழ்வே பறிபோனது தான் மிச்சம். "இயற்கை நீதியை மீண்டும் கிருஷ்ணய்யரே உயிர்த்தெழுந்து வந்தாலும் மாற்றி எழுத முடியாது".

ஜானகி

ஜானகியும் கணேசனும் "ஜாடிக்கு ஏத்த மூடிபோலவும்" "செம்புலப் பெயனீர் போலவும்" வாழ்க்கை தொடங்கியது உண்மை தான். ஜானகிக்கு நல்லதொரு வாழ்க்கை கிடைத்துள்ளதை நினைந்து நினைந்து உள்ளம் பூரித்ததும் உண்மை தான். அதே நேரத்தில் திருமண பத்திரிகையில் கணேசனும் ஜானகியும் அனைவருக்கும் "உறவுகளுக்கு நன்றி நல்கியிருப்பார்கள்".

ஆனால், அதே நன்றியை ஜானகி தன் மாமியாருக்குக் கொடுத்திருந்தால் அவரது வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு வழக்கும் வந்திருக்காது; கதையெழுத வேண்டிய அவசியமும் நேர்ந்திருக்காது. அதுபோலவே ஜானகியின் தந்தை ரத்தினசாமி திரு. கணேசனின் சொத்துகளின் மீது கண்ணாக இருந்துள்ளார்.


கடன் பிரச்சனையும் குடும்ப விரிசலும்

ஜானகி தந்தையின் குற்ற மனம் அப்பொழுதே தெரிந்திருந்தால் இருவீட்டார் அழைப்பு அச்சடிக்கப்பட்டிருக்காது. அவரது கள்ள மனம் திருமணமாக உருவானதே விபரீதத்தின் கருநிலை. அவர் பெண் கொடுத்ததே அவள் நல்ல விதமாக வாழ்க்கை நடத்தவோ அல்லவோ; இவர் பணம் பெற்று தன் குடும்பத்தை நடத்தலாம் என்ற நப்பாசை மட்டுமே ஆகும். அந்த ஆசையை சிறிதளவு நடைமுறைப்படுத்தவும் செய்தார். வெளிப்படையாகக் கூறினால் ஜானகியின் தந்தை சதாசிவம் பத்தரிடம் ரூ. 4,00,000/-ஐ கடனாகப் பெற்றார். அதாவது, அந்த நேரத்தில் (1989) 159.24 சவரன் அளவுள்ள தங்க நகைகளை வாங்கியிருக்க முடியும். ஆனால், அந்தத் தொகைக்கு வட்டிக் கிடையாது. பெற்ற தொகையைத் திருப்பிக் கொடுப்பது தானே அழகு. மானுடப்பண்பும் அதுவாகத்தானே இருக்க வேண்டும். ஆனால், ரத்தினசாமி வாங்கிய ரூ. 4,00,000/- கடனைத் திருப்பிக் கொடுக்க மறுத்தார். "திரைகடல் ஓடி தேடிய திரவியத்தை விடுவார் யார்?" எனவே, கணேசனின் தந்தை திரு. சதாசிவம் ஜானகியின் தந்தை திரு. ரத்தினசாமி மீது நாகப்பட்டினம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் அ.வ.எண்.76/1994-ஐ தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் ஜானகியின் தந்தையால் எதிர்வழக்குரை தாக்கல் செய்யப்பட்டும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டும் அவரவர் வழக்கை அவரவர் நிரூபிக்க முயற்சி செய்தார்கள். ஆனால், நீதித் தராசின் எடையானது கணேசனின் தந்தை சதாசிவத்தின் பக்கமே நின்றது.

இதனால், பணத்தைக் கடனாக வாங்கியதோடு மட்டுமல்லாமல் அதை திருப்பிக்கொடுக்க மறுத்த ஜானகியின் தந்தை ரத்தினசாமி வழக்கை தோல்வியுற்ற இடத்திலேயே நின்று பணத்தைத் திருப்பிச் செலுத்தியிருக்கலாம். இதை எதிர்த்து ஜானகியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிமன்றங்களில் பல நேரங்களில் வழக்குகள் பொருண்மைக்கு மாறாகவும் சட்டத்திற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்குவது இயல்பானது ஆகும். ஆனால், மிகச் சொற்பமான வழக்குகளில் சரியான தீர்ப்புகள் வழங்குவதுண்டு. அதாவது இந்த வழக்கிலும் கூட 2+2=4 என சரியாகத் தீர்ப்பு சொன்னது நீதிமன்றம். அந்தத் தீர்ப்பு K. Rathinasamy Pathar -Vs- P.Sadasivam & 2 Ors. 2009 (3) CTC 650 என்று தீர்ப்புப் பதிப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால் கணேசனுக்கும் ஜானகிக்கும் இடையில் விரிசல் விழத் தொடங்கியது.


மலேசியப் பயணமும் இல்வாழ்க்கைப் பிளவும்

கணேசனுக்கும் ஜானகிக்கும் 22.06.1989-ல் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் பொழுது கணேசன் வீட்டார் ஜானகி வீட்டாரிடம் எந்தவொரு சீர்வரிசையோ சீதனங்களோ கட்டாயப்படுத்தி கேட்டுப் பெறவில்லை. மாறாக கணேசன் வீட்டிலிருந்தே அனைத்து தங்க அணிகலன்களையும் ஜானகிக்கு அணிவித்தனர். இப்படிப்பட்ட கணேசனின் செல்வச் செழிப்பு மிக்க குடும்பச் சூழலையும் வளமான குடும்ப மனநிலையையும் ஜானகிக்கு புரிந்து கொள்ளவோ அவர்களைப் புலகாங்கிதம் அடைந்து வாழவோ அவருக்குத் தெரியவில்லை. ஆனால், கணேசன் வீட்டார் ஜானகியை "மகாலெட்சுமி என மனவோட்டம் கொண்டனர்". எனவே, கணேசனும் ஜானகியும் திருமணம் நிகழ்ந்த மறுமாதமான ஜூலையிலேயே மலேசியாவிற்குப் புறப்பட்டனர். அங்கு கணேசன் மலேசிய நாட்டு குடிமகன். ஆனால், ஜானகிக்கு குடியுரிமை இல்லை என்பதால் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவதற்கு அனுமதி கிடையாது. இந்த ஒரு மாத காலத்தில் ஜானகி குழந்தை பிறப்பிற்கான தகுதியை எட்டினார். இந்த நிலையில் மலேசிய அரசிடம் உரிய முயற்சிகள் மேற்கொண்டும் எந்தப் பலனுமில்லை. எனவே, ஜானகி மீண்டும் தாயகம் (கணேசன் பெற்றோரின் இல்லம்) திருப்பப்பட்டார். இந்த நிகழ்வை ஜானகியும் அவரது தந்தை ரத்தினசாமியும் தவறாகப் புரிந்து கொண்டனர். இல்வாழ்க்கையின் மூலமே ஒருவருக்கொருவர் வளமான புரிதலில் மட்டுமே பொதிந்திருக்கிறது. இதில் இடர்பாடு ஏற்பட்டால் வாழ்க்கையின் ஓட்டம் மாற்றுப்பாதையில் சென்றுவிடும். மேலும், இதனால் இருகுடும்பங்களுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான சூழ்நிலையில் கணேசனை விட ஜானகிக்கு வயது அதிகம் என்பது தெரியவந்துள்ளது. இது மேலும், அவர்களிடையே கூடுதல் விரிசலை ஏற்படுத்தியது. இப்படி மணப்பெண்ணுக்கு வயது அதிகமாக இருக்கும்பொழுது திருமண வாழ்க்கையில் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் இல்வாழ்க்கை இன்பத்திற்கு இடையிடையே இடையூறுகள் வரும் என்பது திண்ணம். ஆனால், விதிவிலக்குகள் எல்லாவற்றிலும் இருப்பது இயல்பே.

கணேசன் ஓராண்டிற்கு பிறகு மலேசியாவிலிருந்து தன் வீட்டிற்கு வரும்பொழுது ஜானகி குழந்தைப் பேறு பெற்றிருந்தார். ஆனால், அந்த குழந்தையை வீட்டின் மகாலெட்சுமி-ஜானகி தன் வீட்டில் வேலை பார்க்கும் பணியாளரிடம் கொடுத்தனுப்பினார். பல மகாலெட்சுமிகள் இப்படி வாழ்க்கையின் சிறு சிறு விழுமியங்களைக் கூட புரிந்து கொள்ளாமல் குணக்கேட்டுடன் குடும்பத்தில் ஒட்டுமொத்த உறவுகளையும் சீரழித்து விடுகின்றனர். இதனால் இவர்களின் இரண்டு மாதமே ஆன இல்வாழ்க்கையில் விரிசல் விடத் தொடங்கியது.

இந்த விரிசலின் விளைவு திருவாரூர் தேரோடும் வீதியிலுள்ள சார்பு நீதிமன்றத்தில் ஜானகிக்கு எதிராக விவாகரத்து வழக்கு, H.M.O.P.No.61/1999-ஐ தொடர்ந்தார் கணேசன். கணேசன் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு மற்றொரு முதன்மை காரணமும் உண்டு. அதாவது, கணேசனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதாக ஜானகியும் அவரது குடும்பத்தினரும் புனைகதை ஒன்றை புனைந்தனர்.


கணேசனின் தங்கை

கணேசனின் தாயார்

மேலும் கணேசனின் தங்கையை அவ

ரது குழந்தை என்றும் புனைகதைக்கு அலங்காரம் சூட்டினர். இதுபோன்ற ஜானகி எண்ணற்ற மகாலெட்சுமி வித்தைகளை செய்தார். இந்த நிலையில் அந்தக் குடும்பத்தினரிடையே இருந்த "கடன் அன்பை மட்டும் முறிக்கவில்லை; அன்பு மகளின் வாழ்க்கையையே முறித்துவிட்டது". ஜானகியின் தந்தை ரத்தினசாமியின் மீது கணேசனின் தந்தை சதாசிவம் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு வழக்கு தொடுத்ததனால் ஜானகிக்கும் கணேசனின் தாயாருக்கும் தகராறு முற்றியது. அந்தத் தகராறில் ஜானகி தனது மாமியாரின் கன்னத்தில் தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி அடித்துவிட்டார். இந்த நிகழ்வை சுயமரியாதையுள்ள எந்த நபரும் மன்னிக்க மாட்டார்கள். "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுவதற்கு" கணேசன் ஒன்றும் இயேசு கிறிஸ்து அல்ல. மாறாக, கன்றின் மீது தேரோட்டிக் கொன்ற தன் மகனை அதே தேரின் சக்கரத்திலிட்டுக் கொன்ற சமநீதிச் சோழனின் மண்ணின் மைந்தன் கணேசன். வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் கணேசனின் விவாகரத்து மனுவை 27.03.2000 அன்று தள்ளுபடி செய்தது.


நீதிமன்றப் படிகளும் பிடி ஆணையும்

ஆனால், கணேசனுக்கு வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் மீறிட்டது. இது ஒன்றும் புதிதல்ல, நீதிமன்றத்தை அணுகிய அனைவருக்குமான இயல்பான மனநிலை தான். எனவே, கணேசன் நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு எண். 92/2000-ஐ தாக்கல் செய்தார். அதுவும் 26.09.2000 அன்று தள்ளுபடியாக, கணேசனின் எண்ணம் சென்னையை நோக்கியது. அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் பல்வகை மேல்முறையீட்டை தாக்கல் செய்தார். அது காலதாமத்திற்கான வழக்கு விசாரணைக்கு வந்த போது உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் கணேசனுக்கும் ஜானகிக்கும் ஒரு சமாதானம் ஏற்பட்டது. அந்த சமாதானத்தில் ஜானகிக்கு பொருள் உதவி கொடுக்க வேண்டும் என்பது ஒரு சரத்து. ஆனால், கணேசனுக்கு மனமில்லை. "மனமுடித்தவளே ஆனாலும் மனமாறிய பிறகு எம்மாந்தர் முன் வருவார்".

இதற்கு எதிராக ஜானகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, Cont.P.No.174/2003-ஐ கணேசனுக்கு எதிராக தொடுத்தார். ஏற்கனவே கணேசனுக்காக வழக்கை நடத்திக் கொண்டிருந்த வழக்கறிஞர் கணேசனின் மீது போடப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வழக்குகளை கணேசனிடமே கொடுத்து விட்டார். அதற்கான காரணம் என்னவென்பது அவருக்கு மட்டுமே புரியும்.

மடை மாற்றும் தொழிலிலும் வழக்கறிஞர்கள்

இந்த நிலையில் தான் வழக்கு முக்கியமான கட்டத்திலிருந்தது. அதாவது ஜானகிக்கு வாழ்க்கை பொருள் உதவி கொடுக்கவில்லை என்ற காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2005-2006 ஆம் காலகட்டத்தில் பெரிய ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருந்த நீதிபதி பி.டி. தினகரன் கணேசனுக்கு எதிராக பிடி ஆணையை பிறப்பித்திருந்தார்.

நீதிபதி பி.டி. தினகரன்

இந்த நேரத்தில் நீதிபதி பி.டி. தினகரன் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்படும் ஆளுமையாக இருந்தார். அவரிடம் வழக்கறிஞர்கள் சென்று உத்தரவு பெறுவதென்பது சற்று கடினமான செயல். அதுவும் இடதுசாரி மற்றும் ஜனநாயக வழக்கறிஞரென்றால், சற்று நீதியின் தராசை அவர்களுக்கு எதிராகப் பிடிப்பார். இந்த நிலையில் தான் கணேசனுக்காக அவரிடம் முன்னிலையாகக் கூடிய தேவை எனக்கு ஏற்பட்டது. அந்த வழக்கு மறுநாள் 07.02.2007 அன்று நீதிபதி பி.டி. தினகரன் அவர்களிடம் விசாரணைக்கு வரவிருந்தது. இந்த பிடி ஆணை கணேசனின் ஆளுமையை பரிசோதித்தது. "அதாவது தன் தாயை நிந்தித்த ஜானகியா அல்லது ஜெயிலா என்ற முடிவெடுக்கும் நிலையில் இருந்தார்".

1795766845318-r93onz.pdfOpen in new tabDownload

இரவில் வந்த அழைப்பும் வழக்கறிஞரின் முடிவும்

இவை இரண்டையும் முறியடிக்க எண்ணினார். உடனே, திருவாரூரில் இருந்த வழக்கறிஞர் திரு. சிவ. இராஜேந்திரன் அவர்களைத் தொடர்பு கொண்டு தன் வழக்கின் அவசரத்தைக் கூறி உதவியை நாடினார். வழக்கின் ஆழத்தையும் அதன் அவசரத்தையும் அறிந்த அவருக்கு கண் முன்னே வந்தவர் அவசர கால மருத்துவராகிய (Casualty Doctor) நான் தான்.

உடனே, கணேசன் என்னை இரவு 8 மணிக்கு தொடர்பு கொண்டு "திருவாரூரிலிருந்து வந்திருப்பதாகவும்; அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றும்; வழக்கு நாளைக்கு வருவதாகவும்" கூறினார். அன்றைய அலுவலகப் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்படுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நான், உடனே வாருங்கள் என்று கூறினேன். வழக்கறிஞர்களின் வாழ்க்கையே வழக்காளிகளின் வழக்குகளை மையப்படுத்தியிருப்பதால் பிரம்மச்சரியம் எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே தான் வழக்கறிஞர் தொழிலை "குதிரை போல் ஓட வேண்டும்; துறவி போல் வாழ வேண்டும்" என்று கூறுவதுண்டு. ஆனால், செயற்கை நுண்ணறிவாளர்கள் மேற்கண்ட இரண்டையுமே ஒழித்துவிட்டார்கள்.

அடுத்த ஐந்து மணித்துளிகளில் கணேசனும் கணேசனின் தாயாரும் என் அலுவலகம் வந்து விட்டார்கள். அவர்களின் முகத்தில் நீதிமன்றத்தின் பயம் சூழ்ந்திருந்தது. நான் இயல்பாக எப்பொழுதும் போல் வழக்கின் பொருண்மையைக் கேட்டறிந்தேன். கணேசனின் தாயார் இறுதியாக என்னிடம் கூறியது: "எதைச் செய்தாவது என் மகன் நாளை ஜெயிலுக்கு செல்லவிருப்பதைத் தடுத்து நிறுத்துங்கள்" என்று வேண்டினார்.

நான் சற்று யோசித்தேன். காரணம் நான் எப்பொழுதுமே பெண்களுக்கு எதிராக ஆஜராவதில்லை. மற்றொரு முக்கிய காரணம் எனக்கும் நீதிபதி பி.டி. தினகரனுக்குமான உறவு வளமானதாக இல்லை. ஆனால், கணேசனைக் காப்பாற்ற முடிவு செய்தேன். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால், ஒரு வழக்கு நீதிமன்றத்தில் வெற்றி பெறுவதென்பது வழக்கின் பொருண்மையும் சட்டத்தின் தன்மையையும் பொறுத்தது மட்டுமல்ல (Merit of the case and Spirit of the law). மாறாக, நீதிபதியின் குணாதிசயம், அவரின் சட்ட நுணுக்கம், வழக்கறிஞரின் சட்ட அறிவு, அவரின் அனுபவம் மற்றும் வழக்கறிஞருக்கும் நீதிபதிக்குமான நேர்மறை உறவு, இதற்கு எதிர்மாறான எதிர்மறை உறவுகள் போன்ற காரணிகள் வினையாற்றுகின்றன.

கணேசனிடமும் அவரது தாயாரிடமும் உடனே நாளை காலை முதல் வேலையாக 10.30 மணிக்குள் ரூ.1,00,000/-க்கு ஜானகியின் பெயரில் கேட்புக் காசோலையை எடுத்து என்னிடம் கொடுப்பதாக இருந்தால் உங்களுக்காக வழக்கில் ஆஜராகிறேன் என்றேன். அவர்களும் அதற்கு எந்த தயக்கமுமின்றி இசைந்தார்கள்.


11-வது நீதிமன்ற அறையும் சட்டப் போராட்டமும்

அப்படியே மறுநாள் 07.02.2007 அன்று கணேசனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி பி.டி. தினகரன் முன்பாக தற்போது 11-வது அறையாக இயங்கி வரும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. எப்பொழுதும் போல் நான் நீதிமன்றத்திற்கு சுமார் 10.00 மணியளவிலேயே சென்றுவிட்டேன். அப்பொழுது அதற்கு முன்பாக என்னிடம் கணேசன் ஜானகியின் பெயரில் எடுக்கப்பட்டிருந்த ரூ.1,00,000/-க்கான கேட்புக் காசோலையைக் கொடுத்தார். ஆனாலும் கணேசனின் மனதில் அவரை நீதிபதி சிறைக்கு அனுப்பி விடுவார் என்ற பதற்றமும் அவரது தாயாருக்கு தன் மகன் சிறைக்குச் சென்றுவிடுவானோ என்ற துக்கமும் அவர்கள் இருவரையும் ஆட்டிப்படைத்தது. அவர்களைப் பார்த்த நான் அவர்களது எண்ண ஓட்டத்தை ஓரளவு கணிக்க முடிந்தது. இதனால் கணேசனை எண். 134, தம்பு செட்டித் தெருவில் இருந்த என்னுடைய அலுவலகத்திற்கு அனுப்பிவிட்டேன். அப்பொழுது கணேசன் என்னிடம் எதையோ கூற முற்பட்டார்... நான் அதைப் புரிந்து கொண்டு நான் பார்த்துக் கொள்கிறேன் நீங்கள் முதலில் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுங்கள் என்று உறுதியாகக் கூறினேன்.

வழக்கறிஞர்கள் தன்னுடைய வழக்காளிகளுக்கு சிக்கலான ஒரு சூழ்நிலை வரும்பொழுது அந்த நேரத்தில் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உறுதியான முடிவெடுக்க வேண்டும்.அதற்கு வழக்கறிஞர்கள் சட்டநூல்களைத் தாண்டி பொது நூல்களையும் அன்றாடம் வரும் செய்தித்தாள்களையும் படித்து update ஆக இருக்க வேண்டும்.

கையில் காசோலையுடனும் நீதிபதி பி.டி. தினகரனை எதிர்கொள்ளப் போகும் எண்ணத்துடனும் நீதிமன்ற நடவடிக்கையை உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் கணேசனின் வழக்கு அழைக்கப்பட்டது. உடனே, நான் எழுந்து முதற்சொல் இல்லாமல் "I am appearing for the contemnor" என்று எப்பொழுதும் போல் உரத்த குரலில் கூறினேன். நீதிபதி பி.டி. தினகரன் சற்று முறைத்த வண்ணம் "Where is the contemnor, whether he paid the maintenance or not" என்று கேட்டார்.

நான் அதற்கு முதற்சொல்லோடு பேசுவதற்கு அனுமதி கேட்டேன். நீதிபதியும் "Yes! what you say" என்று கேட்டார். அதற்கு நான் "பொதுவாக நான் பெண்களுக்கு எதிராக ஆஜராவதில்லை" என்று கூறியவுடன் நீதிபதி குறுக்கிட்டு "ம்... ஆ.. ஊ...ன்னா பெண்களுக்கு எதிரா ஆஜராகமாட்டேங்குறது பெரியாரிஸ்டு கம்யூனிஸ்ட்டுனு சொல்றது" என்று கிண்டல் அடித்தார். இப்படி அவர் பெரியாரையும் கம்யூனிஸ்டையும் கேலி செய்தது உள்ளூர கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால், அந்த கேலிக்கான காரணத்தையும் புரிந்து கொண்டேன். மேலும், ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு "While entrusting the case, I instructed the contemnor to settle the entire maintenance amount. Otherwise, I will not appear" என்று நீதிபதியிடம் கணேசனை பிடி ஆணையிலிருந்து காப்பாற்றுவதற்காக இப்படி கூறிவிட்டு ரூ.1,00,000/-க்கான கேட்புக் காசோலையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தேன். உடனே, நீதிபதி காசோலையைப் பார்த்துவிட்டு மீதி பணம் எங்கே என்று கேட்டார். வங்கிகளுக்கிடையேயான பணப்பரிமாற்றத்தில் காலதாமதமாகிவிட்டது என்று கூறினேன். உடனே, வழக்கை எடுத்து வைத்து விட்டார் (Passed over).

மீண்டும் வழக்கு மாலை 4 மணிக்கு அழைக்கப்பட்டது. நீதிபதி பி.டி. தினகரன் உடனே "Where is the balance amount" என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் பணம் என்னுடைய வங்கிக் கணக்கில் வந்து விட்டது, ஆனால் அதிக தொகை என்பதால் கேட்புக் காசோலை எடுக்க முடியவில்லை என்று கூறினேன்.

அதற்கு நீதிபதியும் "ஓ.. உங்க Bank account-க்கு amount வந்துடுச்சா?" என்று கூறிக் கொண்டே பிடி ஆணையை ரத்து செய்து விட்டு வழக்கை இரண்டு வாரக்காலம் ஒத்தி வைத்தார். இப்படியாக கணேசன் சிறைக்குச் செல்வது தடுக்கப்பட்டது.

இல்வாழ்க்கையின் இன்பம் பணம், பொருள், உறவு போன்ற அருவமான காரணிகளுக்கு உட்பட்டிருந்தாலும் யாரும் எதையும் வாழ்க்கையின் பயணம் இப்படித்தான் செல்லும் என்பதை சூத்திரம் மூலமாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலோ பயணிப்பதில்லை. இந்த இடத்தில் Benedict Anderson அவர்களின் கோட்பாடான "அனைத்தும் கற்பிதமே" என்பதனை அவர் எழுதியுள்ள "Imagined Communities" என்ற நூல் கண்முன்னே வந்து செல்கிறது.

"வழக்கறிஞர்கள் எடுக்கும் முயற்சி வழக்காளியின் வாழ்க்கையே மடை மாற்றும்"

Karuppu News membership

Support independent Tamil journalism

Get one Karuppu account for News, eCourts and citizen services. Start free or choose a membership plan that supports public-interest reporting.

News access One ecosystem account
Subscribe / Join free

கருத்துகள் (0)

கலந்துரையாடலில் இணையுங்கள் — Join the discussion

கருத்து பதிவிட உள்நுழையவும் — log in

0WATG